கருணாநிதி, ஸ்டாலினுடன் சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு!
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான் சத்ருகன் சின்ஹாவும், அக்கட்சியிலிருந்து விலகியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த அவர்கள் இருவரையும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சத்ருகன் சின்ஹாவும், யஷ்வந்த் சின்ஹாவும் ஆழ்வார்பேட்டை வீட்டில் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது மத்திய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் அவர்கள் விவரித்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினுடன் அவர்கள் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பின்போது முன்னாள் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது.
இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தோம். மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் மதவெறி நிலையை கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்ற கருத்துகளை பரிமாறினோம். அதே உணர்வோடு தான் தி.மு.க.வும் மற்ற இயக்கங்களும் அதே நோக்கில் பயணித்துக்கொண்டு இருப்பதை தெரிவித்தேன்.
பா.ஜ.க. ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதற்கு பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் முன்வர வேண்டும். எங்கள் அனைவரின் குறிக்கோளும் பா.ஜ.க. ஆட்சியை அப்புறப்படுத்துவது தான். அதற்காக யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசிக்கவே இந்த சந்திப்பு நடைபெற்றது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். இதையடுத்து யஷ்வந்த் சின்ஹா அளித்த பேட்டியில் கூறியதாவது.
காஞ்சீபுரத்தில் நடக்கும் வணிகர் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை வந்தோம். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றோம். மு.க.ஸ்டாலினை சந்தித்து தற்போது நிலவும் அரசியல் குறித்து விவாதித்தோம்.
அரசியல் சாசனம், ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவை தற்போது மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அதனை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இதன் காரணமாக தான் நான் பா.ஜ.க.வில் இருந்து விலகினேன். மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது.
அனைவரும் ஒருங்கிணைந்து ஜனநாயகம், மதசார்பின்மையை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
”காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் நீங்கள் ஒருங்கிணைப்பீர்களா?” என்று கேட்டதற்கு, “தற்போதைய சூழ்நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைவது மிகவும் அவசியம்” என்றார் யஷ்வந்த் சின்ஹா.