“மாணவர்கள் கெஞ்சும் நிலைக்கு போனதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளே!” – பா.இரஞ்சித்
மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், நீட் தேர்வு எழுதக் காத்திருக்கும் தமிழக மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களில் பலர், அவ்வளவாக படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களால் வெளிமாநிலங்களில் தேர்வு மையத்தை எப்படிக் கண்டுபிடித்துச் செல்ல முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மையங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால், உடனடியாக வெளிமாநிலங்களுக்குச் செல்ல எப்படி டிக்கெட் புக் செய்ய முடியும் என்பன போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு, பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்க்குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித்தும் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
“நீட் தேர்வு, மாணவர்கள் மேல் நிகழ்த்தப்படும் அநீதி. நீட் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிவந்த மாணவர்கள், இன்று எங்கள் மாநிலத்துக்குள்ளேயே தேர்வெழுத அனுமதியுங்கள் என்று கெஞ்சும் நிலைக்குப் போனதற்கு காரணம் மத்திய அரசும், அதன் நிழல் போல இருக்கும் மாநில அரசும் தான்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பா.இரஞ்சித்.