“நான் சாவித்திரியாக மாறுவதற்கு அவரது மகள் எனக்கு உதவியாக இருந்தார்!” – கீர்த்தி சுரேஷ்
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ஆக்கப்பட்டுள்ளது. இது தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரிலும் வருகிற மே 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷூம், சாவித்திரியின் கணவர் ஜெமினி கணேசனின் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானும், பத்திரிகை நிருபர் வேடத்தில் சமந்தாவும், சாவித்திரி நடித்த சில முக்கிய படங்களுக்கு கதை எழுதிய அலூரி சக்கரபாணி வேடத்தில் பிரகாஷ் ராஜூம் நடித்துள்ளார்கள். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். பிரியங்கா தத் தயாரித்துள்ளார்.
‘நடிகையர் திலகம்’ படத்தை விளம்பரப்படுத்துவதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் இதில் கலந்துகொண்டு பேசியதாவது:
‘தொடரி’ பட்த்தில் நான் நடிக்கும்போது, இந்த படம் எனக்கு ஏதாவது நல்லது பண்ணும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு சிலர் என்னை பாராட்டினார்கள். பலர் குறை கூறினார்கள். எனினும், ‘தொடரி’ படத்தை பார்த்து தான் இயக்குனர் நாக் அஸ்வினும், தயாரிப்பாளர் பிரியங்கா தத்தும் எனனை ‘நடிகையர் திலகம்’ படத்துக்காக அணுகினார்கள்.
சாவித்திரி வேடத்தில் நடிக்க முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது. சாவித்திரியாக நம்மால் நடிக்க முடியுமா என்று சந்தேகப்பட்டேன். இயக்குனரும், தயாரிப்பாளரும் எனக்கு தைரியம் கொடுத்தார்கள். அதன்பிறகு தான் நடிக்க சம்மதித்தேன்.
இப்படத்தின் கதையை இயக்குனர் எனக்கு 3 மணி நேரம் சொன்னார். இதற்குமுன் நான் எந்த படத்தின் கதையையும் 3 மணி நேரம் கேட்டதில்லை. சாவித்திரியின் குழந்தைப் பருவம் முதல் – புகழ் பெற்ற நடிகையாக, தயாரிப்பாளராக, குடிப்பழக்கம் உள்ளவராக, வறுமையில் வாடுபவராக – நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தது வரை கதை சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
சாவித்திரி நடித்த பழைய படங்களைப் பார்த்தால், திரையில் அவரது ந்டை, உடை, பாவனை எப்படி இருக்கும் என்பதை நான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், திரைக்கு வெளியே, யதார்த்த வாழ்க்கையில் அவர் எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது. எனவே, சாவித்திரி – ஜெமினி கணேசன் தம்பதியரின் மகளான விஜயா சாமுண்டீஸ்வரியைச் சந்தித்து, சாவித்திரி பற்றிய நிறைய தகவல்களைச் சேகரித்தேன். சாவித்திரியின் யதார்த்தமான பழக்க வழக்கங்கள், நடை, உடை, பாவனைகளைத் தெரிந்து கொண்டேன். நான் சாவித்திரியாக மாறுவதற்கு விஜயா சாமுண்டீஸ்வரி எனக்கு உதவியாக இருந்தார்.
சின்ன வயதில் சாவித்திரி ஒல்லியாக இருந்திருக்கிறார். பிற்காலத்தில் குண்டாகி இருக்கிறார். இதற்காக நான் குண்டாகி விட்டதாக தகவல் பரவியது. அது உண்மை அல்ல. குண்டு உடம்புக்காக ‘பேட்’ வைத்து நடித்தேன். இப்படத்துக்காக நான் ஒல்லியானது தான் நிஜம்.
தினமும் மேக்கப் போடுவதற்கு 4 மணி நேரம் ஆனது. அதன் பிறகு 7 அல்லது 8 மணி நேரம் நடித்தேன். படத்தில் 120 உடைகள் அணிந்திருக்கிறேன். மேக்கப் போட்டால் சாப்பிட முடியாது. திரவ உணவைத் தான் சாப்பிட முடியும். இந்த படத்தில் நடித்து முடிப்பதற்கு ஒரு வருடம் ஆனது. அந்த ஒரு வருடம் நிறைய சிரமப்பட்டேன்.
‘நடிகையர் திலகம்’ படத்தில் நான் 80 சதவிகிதம் சாவித்திரியாக மாறியிருப்பதாகவும், 20 சதவிகிதம் தான் கீர்த்தி சுரேஷ் தெரிகிறார் என்றும் படக்குழுவினர் என்னை பாராட்டியிருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த படம் என மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். படக்குழுவினர் அனைவரும் சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். மே 9ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்.
இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.