47 நாள் வேலை நிறுத்தத்துக்கு பிறகு வெளியாகும் முதல் படம் ‘மெர்க்குரி’!

தமிழ் திரைத்துறையின் 47 நாட்கள் வேலை நிறுத்தத்துக்குப் பிறகு வெளியாக இருக்கும் முதல் படம் ‘மெர்க்குரி’ என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைத்துறை எதிர்கொண்டுள்ள முக்கியப் பிரச்சினைகளைக் களைவதற்காக, கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய படங்களை ரிலீஸ் செய்யாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். கடந்த 47 நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டம், நேற்றுடன் முடிவுக்கு வந்தது. எனவே, வருகிற வெள்ளிக்கிழமை முதல் படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.

இதில், முதலாவதாக ‘மெர்க்குரி’ படம் ரிலீஸாகும் என விஷால் தெரிவித்து உள்ளார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ளார். ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ‘மேயாத மான்’ இந்துஜா, ஷஷாங்க், அனிஷ் பத்மநாபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்ப்ரேட் க்ரைமை மையமாகக் கொண்ட இப்படம் சைலண்ட் த்ரில்லராக உருவாகியுள்ளது.

தமிழ் திரைத்துறை வேலை நிறுத்தம் காரணமாக, தமிழ் தவிர்த்த மற்ற மொழிகளில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 13) இந்தப் படம் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.