காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனைகள்: தமிழ் திரையுலகினர் மவுன போராட்டம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இனறு (8ஆம் தேதி) காலை 9 மணிக்குத் துவங்கியது.
நண்பகல் 1 மணி வரை நடைபெற இருக்கும் இந்த போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி (தொழிலாளர்) அமைப்பு, இயக்குநர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தை துவக்கி வைத்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது:
மக்களுக்கான தேவை என்ன, தீர்வுகள் என்ன என்பதை பற்றி எல்லாம் துறை சார்ந்த அறிஞர்கள், வல்லுநர்களை அழைத்து ஒரு நாள் முழுக்க பேச வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால் அது ஈடேறவில்லை. இந்த குறுகிய காலத்தில், எங்களுக்கு கிடைத்த இந்த சிறிய இடத்தில் நடத்தும் இந்த கண்டன போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ள திரையுலகினருக்கு நன்றி.
எதிர்காலத்தில் மூன்றாம் உலகப்போர் வருமென்றால் அது தண்ணீருக்காகத் தான் வரும் என்கிறார்கள் வல்லுநர்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மக்களின் நியாயமான உரிமை. அதேபோல, ஸ்டெர்லைட் ஆலை பிர்ச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மக்களின் நியாயமான உரிமைக் குரலுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும்.
இவ்வாறு நாசர் பேசினார்.