மோடி அரசை கண்டித்து 900 இடங்களில் மறியல்: 1 லட்சம் பேர் கைது!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்து, திமுக, திக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (5-04-2018) முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இதனால், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், கடைகளும் அடைக்கப்பட்டன.
சென்னை அண்ணா சாலையில் மு.க ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் பேரணியாகச் சென்று மெரீனா கடற்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அண்ணா சாலை – வாலஜா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதுபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரலாறு காணாத வகையில் இன்று 900க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 1 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர்.