முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே ம.நடராசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது

‘புதிய பார்வை’ பத்திரிகையின் ஆசிரியரும், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவருமான ம.நடராசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை காலமானார்.

மருத்துவமனையில் இருந்து நடராசனின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், ஏராளமான பொதுமக்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் நடராசனின் உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பெசன்ட் நகரில் இருந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரான விளாருக்கு எடுத்து செல்லப்பட்டது. பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வந்திருக்கும் சசிகலா தன் கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

அருளானந்த நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட நடராசன் உடலுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று மாலை நடராசனின் சொந்த ஊரில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள அவரது சொந்த நிலத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.