“அண்ணாவும், திராவிடமும் இல்லாத” தினகரன் அணிக்கு நாஞ்சில் சம்பத் குட்-பை!
“ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றியிருக்கும் அதிமுகவை மீட்பேன். அதுவரை என் ஆதரவாளர்கள் ஒன்றுபட்டு இயங்குவதற்காக தற்காலிக அமைப்பு ஒன்றை தொடங்குவேன்” என்று சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சுயேச்சை எம்எல்ஏ டிடிவி.தினகரன் கூறியிருந்தார்.
அதன்படி, கடந்த 15ஆம் தேதி மதுரை மேலூரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார் தினகரன்.. தனது அமைப்புக்கு ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேடை முன்பு அமைக்கப்பட்டு இருந்த 100 அடி உயர கொடி கம்பத்தில், கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற புதிய கொடியை ஏற்றினார்.
அமைப்பின் பெயரில் ‘அண்ணா’ மற்றும் ‘திராவிடம்’ ஆகியவற்றை தினகரன் தவிர்த்திருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், “தினகரன் அணியில் இருந்து நான் விலகி விட்டேன்” என்று நாஞ்சில் சம்பத் இன்று கன்னியாகுமரியில் அறிவித்துள்ளார்.
“நான் இனிமேல் எந்த அரசியலிலும் இல்லை. ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அண்ணாவையும், திராவிடத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு கட்சி நடத்தலாம் என டிடிவி.தினகரன் நினைக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அரசியல் சிறையில் இனி அடைபட்டு கிடக்க மாட்டேன். அரசியலில் இனி நான் இல்லை. தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை காணலாம்” என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.