மன்னர் வகையறா – விமர்சனம்

மோடியடிமை அரசு பஸ் கட்டணத்தை மலையளவு உயர்த்தியிருப்பது, அர்த்தமற்ற ‘ஆண்டாள் சர்ச்சை’யில் ‘ச்சீ…யர் சோடா பாட்டில் சடகோபன்’ பேட்டை ரவுடி பாணியில் மிரட்டல் விடுத்திருப்பது, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ‘சங்கரராமன் படுகொலை’ புகழ் காஞ்சி சங்கரமட விஜயேந்திரன் வருத்தம் தெரிவிக்க மறுப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் டென்ஷனாக இருக்கும் தமிழக மக்கள், அவற்றை எல்லாம் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு இரண்டரை மணி நேரம் வாய்விட்டு சிரித்து மகிழ்வதற்காக வெளிவந்திருக்கிறது ‘மன்னர் வகையறா’ திரைப்படம்.

ஏற்கெனவே ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘தேவதையை கண்டேன்’, ‘காதல் சொல்ல வந்தேன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கி, ‘காமெடியாய் கதை சொல்லும் இயக்குனர்’ என பெயர் பெற்றுள்ள இயக்குனர் பூபதி பாண்டியன், இந்த படத்தில் மூன்று பெரிய குடும்பங்களுக்கு இடையிலான உறவையும், சிக்கலையும், மோதலையும், தீர்வையும் காமெடி, காதல், குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன் கலந்து கலகலப்பாய் சொல்லியிருக்கிறார்.

பிரபு – மீரா கிருஷ்ணன் தம்பதியரின் மூத்த மகன் கார்த்திக் குமார், இளைய மகன் நாயகன் விமல்.

ஜெயப்பிரகாஷ் – சரண்யா பொன்வண்ணன் தம்பதியரின் மகன் வம்சி கிருஷ்ணா. இவருக்கு இரண்டு தங்கைகள். மூத்த தங்கை சாந்தினி தமிழரசன், இளைய தங்கை நாயகி கயல் ஆனந்தி.

மூன்றாவது குடும்பம் சரண்யா பொன்வண்ணனின் அண்ணன் குடும்பம். இந்த குடும்பத்துக்கும் சரண்யா குடும்பத்துக்கும் இடையே மனஸ்தாபம். இதனால் நீண்டகாலமாக தொடர்பற்று இருக்கிறார்கள். அண்ணன் குடும்பத்துடன் உறவை புதுப்பிக்க ஏங்கும் சரண்யா, சமரசம் செய்துகொண்டு, தனது மூத்த மகள் சாந்தினி தமிழரசனை அண்ணன் மகனுக்கு மணம் முடித்து வைக்க முன்வருகிறார்.

சாந்தினி தமிழரசனை காதலிக்கும் கார்த்திக் குமார் (விமலின் அண்ணன்) இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள முயலுகிறார். இதனையடுத்து, திருமண நாளன்று கல்யாண மண்டபத்துக்குள் புகுந்து, அனைவரையும் மிரட்டி, சாந்தினியை அழைத்து வந்து அண்ணனுடன் சேர்த்து வைக்கிறார் விமல். பிரச்சனை வெடிக்கிறது.

விமலும், கயல் ஆனந்தியும் காதலித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு கட்டத்தில், சரண்யாவின் அண்ணன் மகனுக்கு கயல் ஆனந்தியை திருமணம் செய்துவைப்பதன் மூலம் பிரச்சனையை தீர்த்து சுமுக உறவை ஏற்படுத்த முடிவு செய்கிறார்கள். இந்த திருமணத்தை தானே முன்நின்று நடத்தி வைப்பதாக உறுதி அளிக்கிறார் விமலின் அப்பா பிரபு. திருமண வேலைகள் மும்முரமாய் நடக்க, செய்வதறியாது தவிக்கிறார் விமல். அவர் கயல் ஆனந்தியின் கரம் பிடித்தாரா, இல்லையா? என்பது கிளைமாக்ஸ்.

0a1d

நாயகனாக வரும் விமல் காமெடி, ஆக்சன், செண்டிமெண்ட் என சகலத்திலும் தனது பாணியில் கலக்கியிருக்கிறார். தாய்மாமனாக வரும் ரோபோ சங்கருடன் சேர்ந்து லூட்டி அடிப்பது, தனது செல்போனை அபகரித்துக் கொண்டுபோய் எதிர்பாராத விதமாக உடைத்துவிடும் கயல் ஆனந்தியை துரத்தி துரத்தி தெறிக்க விடுவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். டான்ஸ் மூவ்மெண்டில் முன்னேற்றம் தெரிகிறது.

நாயகியாக வரும் கயல் ஆனந்தி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மாறுபட்ட காமெடி நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். விமலை முதலில் ‘அண்ணா’ எனவும், பின்னர் ‘ஜி’ போட்டும் கலாய்ப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.

ரோபோ சங்கருக்கு படம் முழுக்க வருகிற மாதிரி பெரிய காமெடி ரோல். ஜமாய்த்திருக்கிறார். ஆனால், அவ்வப்போது அவர் வடிவேல் குரலில் பேசுவது நெருடல்.

பிரபு, ஜெயப்பிரகாஷ், சரண்யா பொன்வண்ணன், மீரா கிருஷ்ணன், கார்த்திக் குமார், சாந்தினி தமிழரசன், வம்சி கிருஷ்ணா, நீலிமா ராணி, ரேதிகா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கி நல்ல உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

யோகி பாபு ஒரு காட்சியில் வந்தாலும் தன் கலகலப்பு முத்திரையை பதிக்கத் தவறவில்லை. பிக்பாஸ் ஜூலி கிளைமாக்சில் ஒன்றிரண்டு ஷாட்டுகள் மட்டுமே வருகிறார் மனதில் நிற்கவில்லை.

குடும்பப் பின்னணியில் கலகலப்பாக சொல்லப்படும் காதல் – காமெடி படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை இயக்குனர் பூபதிபாண்டியன் மீண்டும் நிரூபித்திருக்கிறார். வளைகாப்புக்கு பலகாரங்கள் கொண்டு செல்லும் காட்சியில், ஜெயப்பிரகாஷ், சரண்யா பொன்வண்ணன், நீலிமா, பாட்டி ஆகியோரை வைத்து இவர் பண்ணியிருக்கும் காமெடி எக்ஸலெண்ட். தவிர, இயக்குனரே ‘கட்டாய கவிஞர்’ ஆகி எழுதியிருக்கும் குத்துப்பாட்டும் தூள்.

‘அவள் அப்படித்தான்’ படத்தின் சிறந்த ஒளிப்பதிவாளரான நல்லுசாமியின் மகன் சுராஜ் நல்லசாமி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘புலிக்கு பிறந்தது பூனை இல்லை’ என்பதை தனது கேமரா மூலம் நிரூபித்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

ஜாக்ஸ் பிஜாய் இசையில் ‘ஒரு தட்டான போல…’ பாடலும் ‘அண்ணனும் வேண்டாம்…’ பாடலும் அருமை. பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

படத்தின் நீளத்தை குறைக்கத் தவறிய எடிட்டர் தலையில் ஒரு குட்டு.

‘மன்னர் வகையறா’ – குடும்பத்துடன் போய் பார்த்து சிரித்து மகிழலாம்!