கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படத்தின் இசை: டி.இமான் வெளியிட்டார்!   

டிட்டு புரொடக்ஷன்ஸ் சார்பாக பானுசித்ரா தயாரித்துள்ள படம் ‘ஜெயிக்கப்போவது யாரு’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, இதில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் சக்தி ஸ்காட். கதாநாயகியாக வந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் ஆர்.பாண்டியராஜன், பவர்ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சக்தி ஸ்காட் மற்றும் ஆண்டன் ஜெப்ரின் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தின் இசையை, 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்துள்ள இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டார்.

இப்படம் பற்றி இயக்குனர் சக்தி ஸ்காட் கூறியதாவது:

கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காமெடி படம் இது. பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியாக நடித்து அசத்தியிருகிறார்.

இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ் என சினிமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக நான் செய்து கின்னஸ் சாதனைக்காக அனுப்பி இருக்கிறேன்.

இதுவரை ஒரு படம் எடுப்பதற்கான 15 துறைகளையும் ஒரே ஒரு மனிதன் ஜாக்கிசான் அவர்கள் “ ஜோடியாக் “ என்ற ஆங்கிலப் படத்தில் பணிபுரிந்து 2012 ம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்தார்.

அதற்கு பிறகு நான் 29 துறைகளில் பணியாற்றி இந்த படத்தை முடித்துள்ளேன்.  இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். கின்னஸ் புத்தகத்தில் எனது சாதனையும்  இடம்பெறும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் சக்தி ஸ்காட்.