“டிக் டிக் டிக்’ படப்பிடிப்பு அரங்கம் எங்கள் நடிப்பை எளிதாக்கியது!” – ஜெயம் ரவி

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’  இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன்.

இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  இதற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஜெயப்ரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன், பாலாஜி வேணுகோபால், நடிகைகள் நிவேதா பெத்துராஜ், ரித்திகா சீனிவாஸ், இசையமைப்பாளர் டி இமான், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ். எஸ், படத்தொகுப்பாளர் ப்ரவீண் ராகவ், கலை இயக்குநர் எஸ் எஸ் மூர்த்தி, பாடலாசிரியர் மதன் கார்க்கி, கிராபிக்ஸ் பணியை மேற்கொண்ட அஜாக்ஸ் முத்துராஜ், விஎப்எக்ஸ் ஹெட் அருண் ராஜ், சண்டை பயிற்சி இயக்குநர் மிராக்கில் மைக்கேல் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் இவர்கள் பேசியதாவது:

பாடலாசிரியர் மதன் கார்க்கி:

இந்த படம் தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிற்கே முக்கியமான படம். ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’ என ஒவ்வொரு படத்தை இயக்கும்போதும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் தேர்ந்தெடுக்கும் ஜேனர் அதிகம் அறியபடாததாக இருக்கும். அவர் வித்தியாசமான கதையை சொல்லக்கூடிய ஆற்றல் பெற்ற படைப்பாளி. பாடலுக்கான சூழலை மிக எளிமையாக சொல்லிவிடுவார். இந்த படத்திலும் கூட அப்பாவிற்கும் மகனுக்கும் இடையேயான உறவை விளக்கும் வகையில் பாடல் வேண்டும் என்று கேட்டார். நான் எழுதிய வார்த்தைகளில் தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்வார்.

அதேபோல் இந்த படத்தின் தயாரிப்பாளரை மனமுவந்து பாராட்டுகிறேன். நான் எழுதிய பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டவுடன் அடுத்த நாளே என்னுடைய அலுவலகம் தேடி எனக்கான ஊதியம் வந்தது. இந்த நடைமுறையை அனைத்து தயாரிப்பாளர்களும் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.

இந்த படத்தின் நாயகனும் விதவிதமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் எங்களால் வித்தியாசமான பாடல்களை எழுத முடிகிறது. அவர் ‘வனமகன்’ படத்தில் நடித்தபோது, காடு மற்றும் இயற்கையை பற்றி எழுதினேன். ‘வனமகன்’ படத்தில் காட்டிற்குள் தொங்கிக்கொண்டு நடித்தார். இந்த படத்திற்கு அரங்கத்தில் தொங்கிக்கொண்டு நடித்தார். அவரது கடுமையான உழைப்பிற்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்கும்.

இசையமைப்பாளர் இமானுக்கு இது நூறாவது படம். நான் கூட அவரிடம் சொல்வேன். நீங்கள் இசையமைப்பாளர் சந்திரபோஸ் காலத்திலிருந்து திரையுலகில் இருக்கிறீர்கள். என்பேன். உடல் எடையை குறைத்துக்கொண்ட பிறகு ஒருநாள் அவரிடம் திடிரென்று உங்களுடைய வயது என்ன? என கேட்டேன். முப்பத்திநான்கு என்றார். எனக்கு 37 வயது ஆகிறது. இது தெரியாமல் இத்தனை நாள் நான் அவரை சார் சார் என்று அழைத்திருக்கிறேன். அவர் திரையுலகில் மிக இளம்வயதில் அறிமுகமாகியிருக்கிறார்.

இந்த படத்தில் யுவன் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அவர் அந்த பாடலை பாடுவதற்காக எடுத்துக்கொண்ட உழைப்பு என்னை வியக்க வைத்தது. இதற்காக இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்து, பாடல் வரிகளை சரியாக உச்சரித்து பாடியதற்காக யுவனுக்கு பாராட்டுகளும் குவிந்தது.

இந்த படத்தில் இந்த தலைமுறையைச் சேர்ந்த தந்தை – மகன் உறவை குறித்த பாடல் இடம் பெற்றது போல், தாய் – மகன் உறவு குறித்த பாடலும் இடம்பெற வேண்டும் என்று இயக்குநரும், இமானும் கேட்டுக்கொண்டனர். அதிலும் ‘குறும்பா..’ எனத் தொடங்கும் பாடலில், இல்லாத வார்த்தைகளை வைத்து அந்த பாடலை எழுதியிருக்கிறன். இந்த பாடலும் வெற்றி. பெறும்.’

நடிகை நிவேதா பெத்துராஜ்:

இந்த படத்திற்காக என்னை இயக்குநர் ஐந்து நிமிடமே பார்த்தார். உடனே அந்த கேரக்டருக்காக தேர்ந்தெடுத்தார். அதற்காகவே நான் இந்த படத்தில் சண்டை காட்சிகளிலும் கூட துணிச்சலாக நடித்தேன். படபிடிப்பின்போது கடினமாக இருந்தாலும், இந்த படக்குழுவினருடன் பணியாற்றியது மென்மையாக இருந்தது.

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன்:

இந்த படம் ஜனவரி 26ஆம் தேதியன்று வெளியாகிறது. ஆனால் இந்த படத்திற்கான பேக்ரவுண்ட் ஸ்கோரை மல்டி டிராக்குடன் கிறிஸ்துமஸ் தினத்தன்றே இசையமைப்பாளர் இமான் கொடுத்துவிட்டார். இது தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம். இதனை சாத்தியப்படுத்தி நூறாவது படத்திலும் ப்ரொபஷனலாக இருப்பதைக் கண்டு வாழ்த்துகிறேன்.

கலைஇயக்குநர் மூர்த்தி ஒரே நேரத்தில் நான்கு அரங்கங்களை வடிவமைத்தார். ஓய்வேயில்லாமல் டீடெயில் துல்லியமாக இருக்க வேண்டும் என்று பணியாற்றியதால் அவருக்கு ஒரு கட்டத்தில் இதய பாதிப்பே வந்துவிட்டது. அவரின் உழைப்பிற்கு ரசிகர்கள் அங்கீகாரமும் பாராட்டும் கொடுப்பார்கள்.

நடிகர் ஜெயம் ரவி:

நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னவுடன் முதலில் யாருக்கும் நம்பிக்கை இல்லை. ‘மிருதன்’ இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை. இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கப்போகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.

நல்ல படம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கையினால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அதேபோல் இந்த படத்தின் அரங்கத்தை முதலில் காட்டிய பிறகு தான் இப்படத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்க வைத்தது. அரங்கத்தின் அமைப்பே நான் உள்பட அனைத்து நடிகர்களின் பங்களிப்பை எளிதாக்கியது. ஏனெனில் ஸ்பேஸ் திரில்லர் என்று சொன்னவுடன் நடிகர்களுக்கு  நடிக்கும்போது தயக்கம் இருக்கும். குழப்பம் இருக்கும். கேள்வி இருக்கும். ஆனால் இந்த படத்திற்காக போடப்பட்ட அரங்கத்தில் உண்மையான விண்வெளி ஆய்வகத்திற்கான உள்ளரங்க அமைப்பு டீடெயிலாக இடம் பெற்றிருந்தது. இதற்காக கலைஇயக்குநரை மனதார பாராட்டலாம்.

இரண்டு மணி நேரம் பத்து நிமிட அளவிற்கு அற்புதமாக இந்த படத்தை எடிட் செய்திருக்கிறார் எடிட்டர். இதற்காக அவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.

இந்த படத்தின் மூலம் என்னுடைய மகன் ஆரவ் அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் ஒருநாள் ‘இயக்குநர் இது போல் ஒரு கேரக்டர் இருக்கிறது, அதில் நடிக்கிறாயா? என கேட்டார்’ என்று சொன்னேன். ‘ம் நடிக்கலாம்’. என்றான். அதற்கு டான்ஸ் தெரிய வேண்டும் என்றேன். கத்துக்கலாம் என்றான் அவனுடைய இந்த ஆட்டிட்யுட் படக்குழுவினரை கவர்ந்தது. அதனால் அறிமுகமாகியிருக்கிறான். அவனுக்கு உங்களின் ஆதரவை வழங்குமாறு தந்தையாகவும், சக கலைஞராகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இசையமைப்பாளர் டி இமான்:

இது என்னுடைய நூறாவது படம். இதற்காக இறைவனுக்கும், இங்கு கூடியிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்கிறேன். இந்த நூறை ஒன்றுக்குப் பின்னால் வரும் இரண்டு ஸீரோவாக பார்க்கவில்லை. இரண்டு ஸீரோவிற்கு பிறகு வரும் ஒன்றாகப் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டும் இசைப்பயணத்தை தொடங்குகிறேன். தொடர்ந்து ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்ற விரும்புகிறேன்.

பொதுவாக நாங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள படங்களுக்கு பின்னணி இசை அமைக்கும்போது ஏராளமான மாற்றங்கள் இருக்கும். ஆனால் ‘டிக் டிக் டிக்’ படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் வருவதற்கு முன்னரே இயக்குநர் ஒவ்வொரு காட்சியின் நீளம் குறித்தும், அதில் இடம்பெறும் விசயங்கள் குறித்தும் டீடெயில் இருந்ததால் பின்னணி இசையை விரைவாக முடிக்க முடிந்தது.

அதேபோல் என்னுடைய இசை பயணத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.