பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு! ஆனால்…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும், இது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக 7 பேரும் ஏற்கனவே 24 வருடங்களை சிறையில் கழித்துள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இந்த விஷயத்தில் மத்திய அரசின் கருத்தினை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று இவர்களது குடும்பத்தாரும், அனைத்து தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும், இந்த 7 பேரும் தங்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளனர். தவிர, தமிழக அரசு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்த தமிழக அரசு, 7 பேரையும் விடுவிக்க தற்போது முடிவு செய்திருக்கிறது.
ஆனால், இது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்டிருப்பதால், இது எந்த நற்பலனையும் கொடுக்காது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். காரணம், இந்த 7 பேர் விடுவிப்புக்கு எதிராக கடந்த சோனியா காந்தி – மன்மோகன் சிங் அரசு எந்த நிலைப்பாட்டை எடுத்ததோ, அதே நிலைப்பாட்டில் தான் தமிழினப் பகைவன் சுப்பிரமணியன் சுவாமியை ராஜகுருவாகக் கொண்ட தற்போதைய மோடி – அருண் ஜெட்லி அரசும் இருந்து வருகிறது. எனவே இந்த 7 பேரின் விடுதலைக்கு சாதகமாக மோடி அரசு கருத்து தெரிவிப்பது சந்தேகமே என்கிறார்கள் அவர்கள்.
பின்னர் ஏன் இப்படியொரு கடிதம்…?
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியா காந்தி – ராகுல் காந்தி – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கும்பல் இந்த 7 பேரின் விடுவிப்பை பகிரங்கமாக கடுமையாக எதிர்க்கும்; இதனால் தமிழக மக்களின் ஆத்திரத்தை சம்பாதிக்கும்; அதற்கான விலையை காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து தி.மு.க.வும் வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் கொடுக்க நேரிடும்.
ஆளும் அ.தி.மு.க.வுக்கு அதுதானே தேவை! 7 பேரின் விடுதலை முக்கியம் இல்லையே!
எல்லாம் கலிகாலம்! மன்னிக்கவும்… தேர்தல் காலம்!!