சென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம்
இயக்குநராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் நாயகன் கோகுல் ஆனந்த். அவரை தயாரிப்பாளர் ஒருவர் ஏமாற்றி விட, தனது நண்பனின் உதவியால் சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளர் ஒருவரை பார்த்து கதை சொல்ல செல்கிறார். அங்கு அந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர செய்வதறியாது விழிக்கும் கோகுல் ஆனந்த், தனது பையுடன் பாஸ்போர்ட், பணத்தையும் பறிகொடுக்கிறார்.
இவ்வாறாக இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் கோகுல் ஆனந்த் சொந்த நாட்டிற்கும் திரும்பி செல்ல முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில், அங்கு நடக்கும் ஷூட்டிங் ஒன்றை பார்த்து, அங்கு செல்கிறார். அங்கு வீடியோ எடுக்கும் சத்யாவிடம் தான் ஒரு இயக்குநர் என்று கூறி தனது நிலையை கூறி உதவியையும் கோருகிறார்.
பின்னர் இருவரும் நண்பர்களாகின்றனர். சத்யா தனக்கு தெரிந்த தயாரிப்பாளரிடம் பேசி கோகுல் ஆனந்துக்கு வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக அவரிடம் அழைத்து செல்கிறார். அந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க ஒப்புக் கொள்கிறார். ஆனால் அது காதல் படமாக இருக்க வேண்டும், அந்த படத்தில் தானும், தனது மனைவியும் நாயகன், நாயகியாக நடிப்போம் என்றும் கூறுகிறார்.
இந்நிலையில், இந்தியா செல்வதற்காக பாஸ்போர்ட் எடுக்கும் முயற்சியிலும் கோகுல் ஈடுபடுகிறார். பாஸ்போர்ட் கிடைக்க சில மாதங்கள் ஆகும் என்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் கோகுல், அங்கு அழுது கொண்டிருக்கும் நாயகி அஞ்சு குரியனை சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே நாயகியுடன் காதல் ஏற்படுகிறது. அவளுடன் பேச்சுக் கொடுத்து அவளது வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டு அதையே படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்கிறார்.
இந்த முயற்சியில், அஞ்சு குரியனுக்கு கேன்சர் இருப்பதையும் தெரிந்து கொள்கிறார். பின்னர் அஞ்சு குரியனின் சிகிச்சைக்காக தயாரிப்பாளரை ஏமாற்றி ஒரு பெரிய தொகையையும் வாங்கி விடுகிறார். இதையடுத்து அந்த தயாரிப்பாளர் கோகுல் ஆனந்த்தை பழிவாங்க முடிவு செய்கிறார்.
கடைசியில் கோகுல் ஆனந்த் இயக்குநராக அவதாரம் எடுத்தாரா? இந்தியாவுக்கு திரும்பினாரா? அஞ்சு குரியன் உடல்நலம் பெற்று திரும்பி வந்தாரா? கோகுல் ஆனந் – அஞ்சு குரியன் இணைந்தார்களா? பழிவாங்க துடிக்கும் தயாரிப்பாளர் என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இயக்குநராக சாதிக்க துடிக்கும் இளைஞராக கோகுல் ஆனந்தின் நடிப்பு சிறப்பு. அவருக்கு வரும் கஷ்டங்கள், அதை அவர் எதிர்கொள்ளும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். இவருடன் இணைந்து சத்யா வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. சத்யாவின் காமெடிக்கு சிரிப்பு வந்தாலும், பல இடங்களில் அவரது காமெடி எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனினும் புதுமையான காமெடிக்கு முயற்சித்திருக்கும் இந்த கூட்டணிக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.
அஞ்சு குரியன் படத்தில் அழகாக காட்டப்பட்டிருக்கிறார். காதல் காட்சிகள், பாடல் என அவரது நடிப்பும் சிறப்பு. மற்றபடி எம்சி ஜெஸ், ராஜேஷ் பாலசந்திரன், ஷிவ் கேசவ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.
இயக்குநராக ஆசைப்பட்டு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அதனால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களை காதல், காமெடி என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் அப்பாஸ் அக்பர். படத்தில் காமெடி காட்சிகள் ரசிக்கும்படியாக இருப்பதற்கு ஜிப்ரானின் இசை முக்கிய காரணமாக அமைகிறது. இவர்களது முயற்சிக்கு பாராட்டுக்கள்.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவே இருக்கிறது. பின்னணி இசை சிறப்பாக வந்திருக்கிறது. கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `சென்னை 2 சிங்கப்பூர்’ காமெடி பயணம்