“தண்டனை பெற்றவரை அப்பாவாக நான் கருதவில்லை”: கவுசல்யா ஆவேசம்!

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யா, தனது தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் தன்னை தரக்குறைவாக விமர்சிப்பவர்களுக்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது..

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார் கவுசல்யா. அவருடன் ‘எவிடன்ஸ’் அமைப்பின் நிறுவனர் கதிரும் இருந்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், “உங்கள் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மகளாக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?” எனக் கேட்டார்.

அதற்கு கவுசல்யா, “அவரை என் அப்பா என்று நான் கருதவில்லை. தவறு செய்திருக்கிறார். தண்டனை கிடைத்துள்ளது. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கின்றனர். எனவே, தண்டனை பெற்றவரை அப்பா என்ற நிலையில் வைத்து யோசித்துப் பார்க்கத் தேவையில்லை” என சற்று கோபமாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சங்கர் கொலை வழக்கில் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரும் வகையில் நிச்சயம் மேல்முறையீடு செய்வோம்.

சங்கர் தனிப்பயிற்சி மையம் நடத்திக் கொண்டிருக்கிறேன். அதை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதே எனது இலக்கு.

சாதிய கொடுமை என்றால் என்னவென்பதை குழந்தையாக இருக்கும்போதே புரிய வைத்தல் வேண்டும். வேர் ஆழமாக இருந்தால்தான் மரம் வலுவாக இருக்கும். அதைத்தான் சங்கர் பயிற்சி மையம் மூலம் செய்து கொண்டிருக்கிறேன்.

என் உயிருள்ளவரை சாதி ஒழிப்புக்காகப் போராடுவேன். சாதி ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். அதற்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி பலரும் பலவிதமாக விமர்சிக்கின்றனர். மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சனம் செய்கின்றனர். சங்கரின் தம்பியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தவறாக எழுதுகின்றனர். இது ஒன்றே போதும் அவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை உணர. மனநோயாளிகளைப் போல் அவர்கள் செயல்படுகின்றனர்.

எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், எப்போது என்ன செய்வார்களோ என்ற அச்சம் இப்போதும் உள்ளது” என்றார்.

கவுசல்யாவைத் தொடர்ந்து பேசிய ‘எவிடன்ஸ்’ கதிர், “கவுசல்யாவின் போராட்டம் அவரது தாய், தந்தைக்கு எதிரான போராட்டம் அல்ல. அது சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம். தமிழகத்தில் தான் அதிகளவில் சாதிய ஆணவப் படுகொலைகள் நடைபெறுகின்றன. எனவே, இங்குதான் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் மிக மிக அவசியமாகிறது. தென்மாவட்டங்களில் பள்ளிக்கூட மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள் கட்டி சாதிப் பிரிவினையை கடைப்பிடிக்கின்றனர். இத்தகைய சாதியக் கொடுமைகளைத் தான் கவுசல்யா எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால், சமூக வலைதளங்களில் கவுசல்யாவை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர். இது குறித்து சைபர் குற்றப்பிரிவில் நிச்சயம் புகார் அளிப்போம்” என்றார்.