ரா.கி.நகர் இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி!
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் இம்மாதம் (டிசம்பர்) 21ஆம் தேதி நடைபெறுகிறது. 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது. அதன்பின்னர் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தனது ரசிகர்களை மீண்டும் சந்திக்க இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சுமார் 15 மாவட்டங்களைச் சேர்ந்த தனது ரசிகர்களை கடந்த மே மாதம ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, “சிஸ்டம் கெட்டுவிட்டது”, “போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். ஆண்டவன் இருக்கிறான்” என்றெல்லாம் தனது அரசியல் பிரவேசம் குறித்து பூடகமாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மீதமுள்ள 17 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை அடுத்த மாதமே ரஜினி சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சந்திப்பு நிகழவில்லை.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னை காவல் துறை ஆணையரிடம் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் அதன் நிர்வாகி சுதாகர் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது::
வரும் (டிசம்பர்) 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடம்பாக்கம், விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார். தமிழகம் முழுவதிலுமிருந்து இதற்காக ரசிகர்கள் வர உள்ளனர்.
தினமும் காலை 8 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை ரசிகர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக்கொள்கிறார். தினமும் ஆயிரம் ரசிகர்கள் வரை இதில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் சுதாகர் கூறியுள்ளார்.