குமரியில் வன்முறையை தூண்டியதாக 7 பேர் கைது: சுப. உதயகுமார் உள்ளிட்ட 14,500 பேர் மீது வழக்கு!
குமரி மாவட்டத்தில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியும், பச்சை தமிழகம் கட்சி அமைப்பாளருமான சுப. உதயகுமார் மற்றும் 17 பாதிரியார்கள் உட்பட 14,500 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வன்முறையை உருவாக்க சதி செய்ததாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
‘ஒக்கி’ புயலில் சிக்கி காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், கேரள இடதுசாரி அரசைப் போல் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரியும், குமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தில் கடந்த 7-ம் தேதி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
ரயில் மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக பாதிரியார்கள் கென்னடி, ஜஸ்டஸ், டார்வின், செல்வன், அன்பரசு, சாம்மேத்யூ, செல்வராஜ், கிறிஸ்துராஜ், கிறிஸ்டின், பொனிப்பாஸ் லூசியான், அருள்சீலன் உட்பட 17 பேர் மற்றும் பச்சை தமிழகம் அமைப்பாளர் சுப. உதயகுமார், குமரி கடலோடிகள் இயக்கச் செயலாளர் சஜிம்சன் உள்ளிட்ட 14,500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்முறையை உருவாக்க சதி செய்ததாக திருநெல்வேலியைச் சேர்ந்த அன்பு, கோவில்பட்டியைச் சேர்ந்த கணேசன், மாரிமுத்து, ஆதி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிம்சன், சென்னையைச் சேர்ந்த மருது, கடையநல்லூரைச் சேர்ந்த முகம்மது ஆனஸ் ஆகிய 7 பேரை கொல்லங்கோட்டில் போலீஸார் கைது செய்தனர். நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் நேற்று அடைக்கப் பட்டனர்.
இது குறித்து தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறும்போது, ‘‘மீனவர் போராட்டத்தை அச்சுறுத்தி முடக்க கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார்.