இந்திரஜித் – விமர்சனம்

நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பது யதார்த்த சினிமா. இதற்கு மாறாக, ரசிப்புக்குரிய இன்னொரு வகை சினிமா இருக்கிறது. அது சுவாரஸ்யமான அதீத கற்பனைகள் நிறைந்த ஃபேண்டஸி சினிமா. இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்த அதிரடி சாகசத் திரைப்படம் தான் ‘இந்திரஜித்’.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சூரியனில் இருந்து பெயர்ந்த அதிசயக் கல் ஒன்று பூமியில் வந்து விழுகிறது. அந்த கல்லுக்கு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை கண்டறியும் சித்தர்கள், அது அந்நியர் வசம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, வடஇந்தியாவின் ஒரு ரகசிய இடத்தில் பாதுகாப்பாக ஒளித்து வைக்கிறார்கள்.

அந்த கல் கிடைத்தால், நம் நாட்டு மக்களை நோயின்றி வாழ வைக்க முடியும் என எண்ணுகிறார், கோவா தொல்லியல் துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் மயில்வாகனன் (சச்சின் கேடேகர்). அவரது குழுவினர் அந்த அதிசயக் கல்லை தேடி அலைகிறார்கள். 4 ஆண்டுகளாகத் தேடியும் அது கிடைக்கவில்லை.

அந்த குழுவினருக்கு உதவ வருகிறார் கதையின் நாயகன் இந்திரஜித் (கவுதம் கார்த்திக்). அவரது உதவியால் கல் இருக்கும் இடம் பற்றிய துப்பு கிடைக்கிறது.

அதேசமயம், கோவா தொல்லியல் துறையின் தற்போதைய அதிகாரியான கபில் ஷர்மா (சுதான்ஷு பாண்டே) அந்த கல்லை கைப்பற்ற திட்டமிடுகிறார். இதற்காக இந்திரஜித் குழுவினரை தனது அடியாட்களுடன் அவர் பின்தொடர்கிறார். அவரால் ஏற்படும் தடைகளையும், மாவோயிஸ்ட்களின் எதிர்ப்பையும் மீறி, அதிசயக் கல்லை இந்திரஜித் கைப்பற்றினாரா என்பது மீதிக் கதை.

0a1e

இந்திரஜித் கதாபாத்திரத்தில் பல அதிரடி சாகசங்கள் புரியும் நாயகனாக நடித்திருக்கிறார் கௌதம் கார்த்திக். சண்டை காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் அசால்டாக அசத்தியிருக்கிறார். நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

அஷ்ரித்தா ஷெட்டி, சோனாரிகா என 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். ஆனால், கதையில் அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாததால், நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாமல் வந்து போகிறார்கள்.

காட்டுப் பகுதியில் இந்திரஜித் குழுவினருக்கு பாதுகாவலராக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் நகைச்சுவை, ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கின்றன.

கோவா தொல்லியல் துறையின் முன்னாள் தலைவராக வரும் சச்சின் கடேகர், தற்போதைய தலைவராக வரும் சுதன்ஷு பான்டே ஆகிய இருவரும் தத்தமது பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளனர்

தயாரிப்பாளர் எஸ்.தாணுவின் மகனும், ‘சக்கரக்கட்டி’ படத்தில் இயக்குநராக அறிமுகமானவருமான  கலாபிரபு, 9 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள படம் இது. சுவாரஸ்யமான கதையை வைத்து, அதிரடி, சாகசத் திரைப்படமாக இதை இயக்கியிருக்கிறார். பிரபல ஹாலிவுட் சீரீஸ் திரைப்படமான ‘இண்டியானா ஜோன்ஸ்’ பாணி இவருக்கு சுலபமாக வசப்பட்டிருக்கிறது என்பது படம் முழுக்கத் தெரிகிறது. அதிசயக் கல் பற்றி பேராசிரியர் தெரிந்துகொண்ட கதையை கிராஃபிக்ஸ் பயன்படுத்தி சொல்லியிருப்பது சிறப்பு.

மாவோயிஸ்டுகள் பற்றிய சித்தரிப்பு இயக்குனரின் அறியாமையை காட்டுகிறது. மாவோயிஸ்டுகளை வலிந்து திரைக்கதைக்குள் இழுப்பதைத் தவிர்த்துவிட்டு வேறுவகையில் காட்சிகளை நகர்த்தியிருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

படத்தின் பெரும் பகுதி அருணாச்சலப் பிரதேசத்தின் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் ராசாமதியின் கேமரா இதை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது. கார் சேஸிங் காட்சிகளில் வனப்பகுதியின் அடர்த்தியை டாப்ஆங்கிள் ஷாட்கள் மூலம் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் கேபியும் படத்துக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.

இந்திரஜித் – ஜாலியாக குழந்தைகளுடன் போய் சுவாரஸ்யமாக கண்டு களிக்கலாம்!