‘அறம்’ இயக்குனர் கோபியின் திரை பிரவேசம் – ஒரு ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’!
‘அறம்’ படத்தின் இயக்குனர் கோபி நயினார் எனக்கு நேரடி அறிமுகம் இல்லாதவர் தான். ஆனாலும் அவரை நான் பல காலமாக நன்கறிவேன்…
அப்போதெல்லாம் அவர் பெயர் ‘கோபி’ மட்டும் தான். சிற்சில சமயங்களில் ‘மீஞ்சூர் கோபி’ என்றும் அறியப்பட்டார். (பார்ப்பன மதத்துக்கு எதிராகத் தோன்றிய புத்த / சமண சமயத்தைப் பின்பற்றிய முன்னோர்கள், ‘நயினார்’ என்ற குலதெய்வத்தை வரித்துக்கொண்டார்கள். அவர்களது சந்ததியினர் தங்கள் பெயரை, அல்லது பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் ‘நயினார்’ என வைத்துக்கொண்டார்கள். கோபி அப்படித்தான் இப்போது ‘கோபி நயினார்’ ஆகியிருக்கிறாரா? தெரியவில்லை.)
பல ஆண்டுகளுக்கு முன், ஒரு பத்திரிகை, அறிவுவாழ்விகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘கருப்பர் சிறப்பிதழ்’ வெளியிடுவதற்கு அறிவுசார் பின்புலமாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் கோபி.
ஆங்கிலேய வெள்ளையர்களால் ‘கருப்பர் நகரம்’ என இழிவாய் அழைக்கப்பட்ட வடசென்னையை மையமாக வைத்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ‘கருப்பர் நகரம்’ என்ற பெயரிலேயே ஒரு படம் இயக்கத் துவங்கியவர் கோபி. (அந்த படத்தின் பணிகள் முழுமை பெறாமல்; பாதி படப்பிடிப்புடன் முடங்கிப் போனது. அதன்பின் அப்படக்கதையின் சில அம்சங்களை இயக்குனர் பா.ரஞ்சித் உருவி, தான் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில் சேர்த்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததும், அதை பா.ரஞ்சித் மறுத்ததும் தனிக்கதை!)
‘தந்தி டிவி’யில் முன்பு சீமான் நடத்திய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், விளிம்பு நிலை மனிதர்களுக்கு ஆதரவாகவும் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைத்து, அமோகமாய் கைதட்டல்கள் பெற்று, அனைவரது கவனம் ஈர்த்தவர் கோபி.
இவ்வாறெல்லாம் உற்று நோக்கிவந்த என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆனார் கோபி. என்னை வளர்த்தெடுத்த சித்தாந்தங்கள் தான் கோபியையும் வார்த்தெடுத்திருக்கின்றன என்ற பிரியத்தில் ஏற்பட்ட மானசீக நெருக்கம் அது.
இதன்பின்னர், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்துக்கு கோபி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல் என் நண்பர்கள் வட்டாரத்தில் உலா வரத் தொடங்கியது. மகிழ்ச்சி அடைந்தேன். முருகதாஸ் தயாரிப்பதால், இது ‘கருப்பர் நகரம்’ போல் இடையில் முடங்காமல், பணிகள் துரிதமாய் நடைபெற்று, படம் விரைவில் வெளிவரும் என்று திடமாய் நம்பினேன். ஆனால் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கூட நடைபெறவே இல்லை.
இதற்கிடையில், விஜய் நடிப்பில், லைக்காவின் மெகா பட்ஜெட்டில், ‘கத்தி’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார் முருகதாஸ். “அது என் கதை. எனது ‘மூத்தகுடி’ என்ற கதையைத் தான் ‘கத்தி’ என்ற பெயரில் படம் எடுக்கிறார்கள்” என்று உரிமை கொண்டாடி நீதிமன்றம் போனார் கோபி. பணம் பிடுங்குவதற்காக இப்படி வழக்குத் தொடுப்பவர்களில் ஒருவராகத் தான் கோபியை பல பத்திரிகையாளர்கள் பார்த்தனர். ஆனால், நான் கோபியின் கதையுரிமை கோரிக்கையில் அவரது கதறலையும், ரத்தக் கண்ணீரையும் பார்த்தேன்.
‘கத்தி’ வெளியானதும், “நல்ல படம்; பிரமாதமான படம்; சமூக அக்கறை உள்ள கதை; முருகதாஸ் மிகப் பெரிய சமூகப் போராளி” என்றெல்லாம் பல பத்திரிகையாளர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கையில், பெற்ற பிள்ளையை பறி கொடுத்த தாய் போல் கதையை களவு கொடுத்த கோபி இப்போது எங்கே, எப்படி பரிதவித்துக்கொண்டிருக்கிறாரோ என்று மனம் கசிந்து என்னைப் போலவே உள்ளொடுங்கியவர்கள் இருவர். ஒருவர் எழுத்தாளர் பா.ஏகலைவன். மற்றொருவர் எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான முத்துகிருஷ்ணன். ‘கோபியின் கதை எப்படி திருடப்பட்டது’ என்பது குறித்து இந்த இருவரும் எழுதிய பதிவுகளைப் படித்து மனம் பதறினேன். அந்த பதிவுகளை இணைத்து செய்தியாக்கி, “நாலு இட்லியும் ஒரு டீயும் கொடுத்து திருடப்பட்டது தான் ‘கத்தி’ படக்கதை” என தலைப்பிட்டு, நமது ‘ஹீரோ நியூஸ் ஆன்லைன்’ மூலம் கொளுத்திப் போட்டேன். அது தீயாய் பற்றிக்கொண்டது. பல்லாயிரக்கணக்கில் பகிரப்பட்டது. சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.
அந்த சமயத்தில், அமெரிக்காவில் வாழும் என் முகநூல் நண்பர் கார்த்திக் ரங்கராஜன், கோபியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடத்திய உரையாடலை முழுமையாகப் பதிவிட்டிருந்தார். “கோபிக்கு எந்த வங்கியிலும் கணக்குகூட இல்லை” என்ற தகவலும் அதில் இருந்தது. கார்த்திக் ரங்கராஜனின் பதிவையும் செய்தியாக்கி நமது ‘ஹீரோ நியூஸ் ஆன்லைனில்’ வெளியிட்டேன். முருகதாஸின் ‘சமூகப் போராளி’ முகமூடி கழன்று விழுந்தது.
இவற்றுக்குப் பின்னர் தான் பிற ஊடகங்கள் விழித்தெழுந்தன. முருகதாஸை சந்தேகக் கண் கொண்டு பார்த்தன. போட்டி போட்டு கோபியை தேடிப் பிடித்து பேட்டி எடுத்து பரபரப்புடன் வெளியிட்டன. தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர் ஆனார் கோபி.
கதை உரிமைக்காக சமரசமின்றி நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்துவார் கோபி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென்று வழக்கை வாபஸ் பெற்று மாயம் ஆனார். “பணம் கொடுத்து செட்டில் பண்ணி விட்டார்கள்” என்றார்கள் சில பத்திரிகையாளர்கள். கோபிக்காக பிடிவாதமாய் வக்காலத்து வாங்கியதற்காக என்னை நக்கலடித்தார்கள். அது பற்றி கவலைப்படாமல், அப்போதும் நான் கோபிக்கு ஆதரவாகத் தான் இருந்தேன். ஏனெனில், ஓடிக்கொண்டே இருப்பது தான் வாழ்க்கை; ஒரே ஆற்றில் இரண்டு முறை மூழ்க முடியாது என்ற புத்த தத்துவம் உணர்ந்தவன் நான்.
ஒரு பெரிய இடைவெளி. கோபி எங்கே போனார், என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தபோது தான் இன்ப அதிர்ச்சியூட்டும் அந்த தகவல் எனக்குக் கிடைத்தது. கோபி சர்ச்சைக்குரிய நபராக இருப்பதால் அவருக்கு யாரும் கால்ஷீட் கொடுக்க மாட்டார்கள் என நம்பப்பட்ட நிலையில், ‘நயன்தாரா கால்ஷீட் கொடுத்திருக்கிறார். வெளியே தெரியாமல், விளம்பரம் எதுவுமின்றி நயன்தாராவை வைத்து ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பையும் நடத்தி முடித்துவிட்டார் கோபி’ என்பது தான் அந்த தகவல். நயன்தாரா மீது நான் வைத்திருக்கும் மதிப்பு இதனால் பல மடங்கு உயர்ந்துவிட்டது. அதை கொண்டாடும் வகையில், “தமிழ் திரையுலகினருக்கு தெரியாமல் நயன்தாரா செய்த காரியம்’ என்ற தலைப்பில் இச்செய்தியை மகிழ்ச்சியுடன் வெளியிட்டேன். பெயர் வைக்கப்படாத கோபி – நயன்தாரா ப்ராஜக்ட் பற்றி முதன்முதலில் செய்தி வெளியிட்ட தமிழ் ஊடகம் ‘ஹீரோ நியூஸ் ஆன்லைன்’ தான். இதற்குப் பின்னர் தான் படக்குழு சார்பில் அதிகாரபூர்வ செய்தி வெளியிடப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் ஃபோர் ஃபிரேம்ஸ் ப்ரிவியூ திரையரங்கில் ‘அறம்’ படத்தின் பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்புக் காட்சி. (பிரஸ் ஷோ). படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும், ‘கோபி மீது நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை’ என்று எனக்குச் சொல்லியபடியே இருந்தது. பேய்க்கதையையும், நாய்க்கதையையும் மட்டுமல்ல, சமூகப்பிரச்சனை சம்பந்தப்பட்ட கதையையும் த்ரில்லர் பாணியில் சொல்ல முடியும் என்பதை எனக்கு முதன்முதலில் உணர்த்திய படம், 1980களின் துவக்கத்தில் வெளியான கோவிந்த் நிஹாலினியின் ‘ஆக்ரோஷ்’. கோபியின் ‘அறம்’ பார்க்கும்போது அது மீண்டும் உறுதியானது.
1960களின் பிற்பாதியில் இந்தியாவில் நக்சல்பாரி புரட்சி வெடித்தபோது, அந்த புரட்சியை ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ என வர்ணித்து வரவேற்றது மாவோ தலைமையிலான சீன அரசின் வானொலி. ‘அறம்’ படம் பார்த்து முடித்தவுடன் எனக்குத் தோன்றியது – கோபியின் திரை பிரவேசம் ஒரு ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’. கேடுகெட்ட மசாலா குப்பைப் படங்களை எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா, இனி புரட்சிகர கதைகளுக்கும் காது கொடுக்கும்.
படம் முடிந்து அரங்கைவிட்டு வெளியே வரும்போது, ஹாலில் இயக்குனர் கோபி நின்றுகொண்டிருந்தார். ஏகப்பட்ட பத்திரிகையாளர்கள் கும்பலாய் அவரை சுற்றி நின்று கைகுலுக்கி பாராட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களில், முருகதாஸூக்காக வக்காலத்து வாங்கியவர்களும், ‘முருகதாஸிடம் பணம் வாங்கிக்கொண்டு ஓடிப்போனார் கோபி’ என்று இகழ்ந்தவர்களும் கூட இருந்தார்கள்…!
பிரபலமான, அல்லது பிரபலமாகிக் கொண்டிருக்கும் எவரையும் நானாகத் தேடிச் சென்று பார்த்து வழியும் பழக்கம் எனக்கு என்றைக்குமே இல்லை என்பதால், மனதுக்குள் கோபியை வாழ்த்தியபடி அவரை கடந்து சென்று ஃபோர் ஃபிரேம்ஸை விட்டு வெளியேறினேன்.
ஆக, ‘அறம்’ படத்தின் இயக்குனர் கோபி நயினார் எனக்கு இப்போதும் நேரடி அறிமுகம் இல்லாதவர் தான்…!
பா.ஜா.ராஜய்யா