‘லட்சுமி’ குறும்படம்: சில குறிப்புகள் – ரவிக்குமார்

கணவன் லேத்தில் வேலை பார்ப்பவர், மனைவி பிரிண்டிங் ப்ரஸ்ஸில் வேலை செய்பவர். இருவரும் உடல் உழைப்பாளிகள். அத்தகைய மனிதர்களின் குடும்பம் எப்படியிருக்கும், அவற்றில் எத்தகைய பிரச்சனைகள் எழும் என்பதைப் பற்றிய புரிதல் இல்லாமல் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. Lower middle class குடும்பங்களிலிருந்து அமைப்புசாரா தொழிலகங்களுக்கு வேலைக்குப் போகும் பெண்கள் குறித்த மலினப்படுத்தப்பட்ட சித்திரத்தையே இது தருகிறது.

மொழியின் சாத்தியங்கள் குறித்த பிரக்ஞை ஏதுமின்றி தமிழ் popular literature எப்படி தட்டையாக உற்பத்தி செய்யப்படுகிறதோ அதுபோல தொழில்நுட்பம் வழங்கும் சாத்தியங்களைக்கூட பயன்படுத்தாமல் ஒரு காட்சியை வேறெந்த வாசிப்புக்குமான திறப்புகளின்றி ஒற்றைப் பரிமாணத்தில் சித்திரிப்பதே தமிழ் சினிமாவின் பொது விதி. இந்தப் படம் அதே வழியில் நடந்துள்ளது.

தமிழ் வியாபார சினிமாவின் அணுகுமுறைகள் அனைத்தும் அச்சுப் பிசகாமல் இந்தக் குறும்படத்திலும் பின்பற்றப்பட்டுள்ளன . அந்தப் பெண்ணின் வாழ்க்கை யந்திரத்தனமாக இருக்கிறது என்பதைக் காட்ட இயக்குனர் பயன்படுத்தியுள்ள காட்சிகள் மசாலா சினிமா பாணியில் உள்ளன.

கதாநாயகி உதாசீனப்படுத்தப்படுவதைச் சொல்ல மிகவும் தேய்ந்துபோன முறையே பயன்படுத்தப்பட்டுள்ளது. அது பெண் ஒடுக்குமுறை குறித்து ஏற்கனவே இங்கு கட்டமைத்து வைக்கப்பட்டுள்ள ஸ்டீரியோடைப்பையே மீண்டும் சொல்லி அதை வலுப்படுத்துகிறது.

அந்த சிற்பி பாத்திரம் இயக்குனரின் அமெச்சூர் தனத்துக்கு ஒரு உதாரணம். அவருக்கான வசனங்கள், அவரது உடை அலங்காரம் எல்லாமே சிரிப்பை வரவழைக்கின்றன. காமெடியன் இல்லாத குறையை அந்தப் பாத்திரத்தை வைத்து ஈடு செய்திருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. சிற்பிகளை, ஓவியர்களை இதைவிட மோசமாக கேவலப்படுத்த முடியாது.

ரயில், பஸ் ஓடாததற்கு காவிரி பிரச்சனையை காரணமாகக் கூறுவது, Macro politics குறித்து இயக்குனருக்கு இருக்கும் எதிர்மறை மனோபாவத்தைக் காட்டுகிறது. சென்னையின் தெருக்கள் காவிரி பிரச்சனைக்காக மட்டுமல்ல, கலவரமே நடந்தாலும் வெறிச்சோடிப் போவதில்லை.

ஒரு பெண்ணுக்கு மண உறவு தாண்டி இச்சை ஏற்பட வேண்டுமானால் அவள் கணவனால் உதாசீனப்படுத்தப்பட வேண்டும், கணவனுக்கு வேறு தொடர்பு இருக்க வேண்டும் என்று விதிகளை உருவாக்குகிறது இந்தப் படம். இது மனம், இச்சை, வேட்கை குறித்த எந்தப் புரிதலும் இயக்குனருக்கு இல்லை என்பதையே காட்டுகிறது.

0a1f

லஷ்மியாக நடித்திருப்பவரைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தீட்சண்யம் மிக்க விழிகளோ, உயிர்ப்பு மிக்க உதடுகளோ இன்றி அவரது முகம் சாதாரணமாகத் தான் உள்ளது. ஆனால், அந்த முகத்தில் பல்வேறு விதமான உணர்வுகளையும் தெளிவாக அவர் வெளிப்படுத்தியிருப்பது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளிடம்கூட இல்லாத திறமை. அவருக்குப் பாராட்டுகள்.

ரவிக்குமார்