ஹார்வர்டு தமிழ் இருக்கை: கனடா இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.16லட்சம் நிதி!

சில மாதங்களுக்கு முன்பு, இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் கனடா வந்திருந்தார். அப்போது, டொரன்டோ நகரத்து மேயர், ‘கனடாவில் ரஹ்மான் குடியேற வேண்டும்’ என்று மேடையிலேயே அவருக்கு அழைப்பு விடுத்தார். ரஹ்மான் பதில் சொல்லவில்லை. பின்னர் தன் முகநூலில் எழுதும்போது, நகரப் பிதாவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, ‘தான் தமிழ்நாட்டில் சுற்றத்துடனும், நண்பர்களுடனும், ரசிகர்களுடனும் மகிழ்ச்சியாக வாழ்வதாக’ அறிவித்தார்.

சமீபத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு ரஹ்மான் மறுபடியும் டொரன்டோ வந்திருந்தார். கடந்த 21-ம் தேதி பவரேட் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் இருக்கைகளும் நிரம்பி வழிந்தன. பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். இரவு 8 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி சரியாக 11 மணிக்கு முடிவடைந்தது. ஏறக்குறைய 20 பாடல்களை அவரும், குழுவினரும் பாடினர். ‘ஜெய்ஹோ’ பாடலை அவர் பாடியபோது பின் திரையில் பச்சை, வெள்ளை, செம்மஞ்சள் வர்ணங்கள் ஓடிய காட்சி மறக்க முடியாதது.

சித் ஸ்ரீராம், சாஷா திருப்பதி, ஹரிசரண், சேஷாத்ரி, ஜோனிடா காந்தி, பென்னி தயால் ஆகியோர் சிறப்பாகப் பாடினர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ‘ரோஜா’வில் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ‘மெர்சல்’ படத்துக்கு நடுவே 25 ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும் பாடல்கள் புதிதாகவே இருந்தன. பார்வையாளர்கள் தங்களை மறந்து ஆடினர்.

‘‘என்னை ‘மோசார்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்று அழைத்து சின்ன வட்டத்துள் அடைப்பது மட்டுமல்ல, மோசார்ட்டுடன் ஒப்பிடாதீர்கள்’ என்று முன்பு கூறியிருந்த ரஹ்மானை இப்போது விடாப்பிடியாக ‘ஆசியாவின் மோசார்ட்’ என அவரது ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

260 ஆண்டுகளுக்கு முன்பு மோசார்ட் இயற்றிய இசைக்கோவைகள் இன்றும் புத்துயர்வு பெற்று ஒலிக்கின்றன. ரஹ்மானின் பாடல்களிலும் புதுமை குறைவதில்லை. மோசார்ட் சிறு வயதிலேயே இசையமைக்கத் தொடங்கிவிட்டார். ரஹ்மானும் 9 வயதிலேயே தன் முதல் பாடலுக்கு இசை அமைத்துவிட்டார். ‘இனிவரும் 100 ஆண்டுகளில் இவரைப்போல இன்னொருவரைக் காண்பது அரிது’ என்று மோசார்ட் பற்றி இசை வல்லுநர் ஒருவர் கூறினார். அது ரஹ்மானுக்கும் பொருந்தும்.

இசை நிகழ்ச்சியின் முடிவில், இதை ஏற்பாடு செய்த ‘ஆர்யா கனடா’ நிறுவனத்தின் அதிபர் கிஷான் நித்தி, ரஹ்மானை மேடைக்கு அழைத்தார். ரஹ்மான் சார்பில் பேசிய பாடகர் ஸ்ரீநிவாஸ், ஹார்வர்டில் நிறுவப்பட இருக்கும் தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அதற்கு நன்கொடை வழங்கப்போவதாக அறிவித்தார்.

கிஷான் நித்தி, ரஹ்மான், ஸ்ரீநிவாஸ் ஆகியோர் 25,000 டாலர் (சுமார் ரூ.16 லட்சம்) காசோலையை வழங்க, அதை ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர் விஜய் ஜானகிராமனும், நானும் சபையோரின் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்டோம்.

இந்த நிகழ்ச்சியில் மாறாத வியப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் பற்றியும் கூறவேண்டும். ‘மெர்சல்’ படத்தில் வரும் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை ரஹ்மான் பாடியபோது அரங்கமே எழுந்து ஆடியது. மகிழ்ச்சி கரை புரண்டது. ஆனால் ‘உந்தன் தேசத்தின் குரல்’ பாடல் வரிகளை ரஹ்மான் தொடங்கியபோது ஒரு நிமிடத்தில் சபை அப்படியே உருகி மாற்றம் கொண்டது. அரங்கத்தில் இருந்தவர்களில் 90 சதவீதம் பேர் புலம்பெயர்ந்தவர்கள். அவர்களால் நாட்டைப் பறிகொடுத்த வலியையும் இழப்பையும் உணரமுடியும். அப்படியே நெகிழ்ந்து போயினர்.

டொரன்டோ மேயர் கனடாவுக்கு அழைத்தபோது ரஹ்மான் மறுத்த காரணம் புரிந்தது. அயல்நாடு என்பது விடுதிதானே. சொந்த நாடுபோல வருமா? அவர் தமிழ்நாட்டிலே இருந்து இசையைப் பரப்பட்டும். எங்கே இருந்தால் என்ன? அவர் உலகத்துக்குச் சொந்தமானவர்!

– அ.முத்துலிங்கம்

கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்

Courtesy: Tamil.thehindu.com