நடிகர் ரஜினிக்கும், மனைவி லதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு!
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி “.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என்று நரேந்திர மோடி தொலைக்காட்சியில் அறிவித்தவுடன், வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்து அதை வரவேற்றவர் நடிகர் ரஜினிகாந்த். மோடியின் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், “புதிய இந்தியா பிறந்தது” என குதூகலித்து, மோடிக்கு “ஹேட்ஸ் ஆஃப் சொன்னவர் அவர்.
மோடியின் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ரஜினியைப் போலவே வரவேற்றவர் நடிகர் கமல்ஹாசன். ஆனால், கறுப்புப்பண முதலைகளுக்கு எதிராக அல்ல, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட கபட நடவடிக்கை இது என்று ஊர் உலகமே சுழற்றியடிக்க, அதை எதிர்கொள்ள முடியாமல் சமீபத்தில் சரணடைந்தார் கமல். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அவசரப்பட்டு ஆதரித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் அவர்.
கமல் மட்டும் அல்ல, பாஜக.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி போன்றவர்களும் மோடியின் செல்லா நோட்டு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இத்தனைக்குப் பிறகும் மோடி “புதிய இந்தியா”வை பெற்றெடுக்க பக்கத்தில் இருந்து பிரசவம் பார்த்தது போல் வாழ்த்துச் சொன்ன ரஜினி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவான தன் நிலைப்பாட்டை இன்றளவும் மாற்றிக்கொள்ளவில்லை.
ஆனால், ரஜினியின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக தற்போது கருத்துத் தெரிவித்திருக்கிறார் அவரது மனைவி லதா ரஜினிகாந்த். மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தனது பிசினஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக புலம்பியிருக்கிறார் அவர். இது பற்றிய விவரம்:
சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு உள்ள ஒரு கடையை வாடகைக்கு எடுத்து லதா ரஜினிகாந்த் டிராவல் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை பல வருடங்களாக நடத்தி வருகிறார். தற்போது மாதம் ரூ.3,702 வாடகை செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் திடீரென மாநகராட்சி ஜூன் மாதம் அந்த கடை வாடகையை பலமடங்கு உயர்த்தி உள்ளது. மார்ச் மாதம் முதல் ரூ.21,160 வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் லதா ரஜினிகாந்துக்கு நோட்டீசு விடப்பட்டது.
மாநகராட்சியின் இந்த திடீர் வாடகை கட்டண உயர்வை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் லதா ரஜினிகாந்த் வழக்கு தொடர முடிவு செய்தார். இதையொட்டி லதா ரஜினிகாந்த் சார்பில் அவரது அங்கீகாரம் பெற்ற மோகன் மேனன் என்பவர் மூலம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் கடந்த பல வருடங்களாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அதில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறோம். மாதம் வாடகை கட்டணம் ரூ.3,702 செலுத்தி வருகிறோம்.
திடீரென கடை வாடகையை மாநகராட்சி பல மடங்கு உயர்த்தி உள்ளது. மார்ச் மாதம் முதல் முன்தேதியிட்டு வாடகை கட்டணம் ரூ.21,160 செலுத்த வேண்டும் என அறிவித்து உள்ளது. திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, வாடகை கட்டண உயர்வை ரத்து செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். பழைய கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆக, பண மதிப்பிழப்பு ந்டவடிக்கை தொடர்பாக, ரஜினிக்கும், லதா ரஜினிகாந்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது இதன்மூலம் அம்பலமாகியிருக்கிறது. “நிஜ வாழ்க்கையில் எனக்கு நடிக்கத் தெரியாது” என்று ரஜினி சொல்வது உண்மை என்றால், செல்லா நோட்டு நடவடிக்கையை ஆதரித்ததற்காக அவரை பகிரங்கமாக மன்னிப்பு கேட்கச் செய்ய வேண்டியது லதா ரஜினிகாந்தின் கடமை, இல்லையா?
அமரகீதன்