எனில், விஷால் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியவன் எவன்டா…?
‘மெர்சல்’ திரைப்படத்தை இணையத்தில் பார்த்ததாக பாஜக தேசிய செயலாளரும், வட இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவருமான எச்.ராஜா ஷர்மா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், “மக்கள் அறிந்த தலைவராக இருக்கும் எச்.ராஜா இப்படி வெட்கமில்லாமல் பைரசியில் படம் பார்க்கலாமா? இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள விஷாலின் அலுவலகத்தில் மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. விஷால் அலுவலகம் முன் நின்றிருந்த, மத்திய அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் காரும் ஊடகங்களில் காட்டப்பட்டது. விஷாலின் அலுவலகம் ஜி.எஸ்.டி வரியை முறையாக செலுத்தியுள்ளதா என மொத்தம் 3 அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு சோதனை செய்ததாகவும் செய்திகள் தெரிவித்தன.
இச்சோதனையின்போது அந்த அலுவலகத்தில் விஷால் மற்றும் அவரது மேலாளர்கள் யாரும் அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எச்.ராஜா ஷர்மாவுக்கு கண்டனம் தெரிவித்த விஷாலை உண்டு இல்லை என பண்ணுவதற்காகவும், ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக, மோடி அரசுக்கு எதிராக துணிவுடன் ஒருமித்து குரல் கொடுக்கும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரை மிரட்டுவதற்காகவும் இந்த சோதனை நடைபெற்றதாக நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ், இயக்குனர் அமீர் உள்ளிட்ட திரையுலகினரும், சமூக வலைத்தள பதிவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, “விஷால் அலுவலகத்தில் நாங்கள் அப்படி ஒரு சோதனை நடத்தவே இல்லை” என்று சென்னை மண்டல ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு இணை இயக்குநர் ராஜசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். (அவரது அறிக்கை – கீழே)
எனில், விஷால் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியவன் எவன்டா…?