ரஜினி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை: அரசியலில் தோற்றவர் அல்ல சிவாஜி!
நடிகர் திலகத்திடம் அரசியல் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ரஜினி கூறுகிறார்.
சிவாஜி தோல்வி அடைந்த அரசியல்வாதி அல்ல.
அண்ணா எழுதி பெரியார் தலைமையில் அரங்கேறிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகம் வி.சி.கணேசனை சிவாஜி கணேசனாக்கியது.
அன்று முதல் சுமார் ஆறேழு வருடம் திராவிட இயக்கத்தின் போர்வாள்களில் சிவாஜியும் ஒருவர்.
– எம்ஜிஆருக்கும் முன்பே புயல் நிவாரண நிதிக்கு ‘பராசக்தி’ வசனம் பேசி துண்டேந்தி எம்ஜிஆரை விடக் கூடுதலாக வசூல் செய்தார் சிவாஜி. அது 1957.
“அண்ணா ஆணையிட்டால் பட ஒப்பந்தங்களைக் கிழித்தெறிந்து திராவிட விடுதலைப் போரில் களம் காணத் தயார்!” என்று திமுகவின் லால்குடி மாநாட்டில் அறிவித்தார் சிவாஜி.
பின்னர் அவரது காங்கிரஸ் சகாப்தம்!
எம்பி உட்பட உயர் பதவிகள் தேடி வந்தன – மத்திய ஆளும் கட்சி ஜனதாதள் மாநிலத் தலைவர் பதவி உட்பட.
பலருக்கும் மறந்த விஷயம் – இந்திரா, காமராஜ் இணைப்புக்கு சிவாஜி எடுத்த பெரும் முயற்சிகள்.
அதன் விளைவாக பாண்டிச்சேரியில் இருவரும் கூட்டணி கண்டனர்
சிவாஜியின் ஒரே சறுக்கல் – அவர் திருவையாறு தொகுதியில் 1989-ல் தோற்றது.
அப்போது பத்திரிகையாளனாக நான் அவரைச் சந்தித்துள்ளேன்.
த.மு.மு – ஜானகி கூட்டணிக்கு வரவேற்பு இல்லை என்பதை அவர் தாமதமாகவே புரிந்துகொண்டார்.
அது மட்டுமே சிவாஜியின் அரசியல் தோல்வி.
அப்படிப் பார்த்தால் 1980 பாராளுமன்ற தேர்தல் மற்றும் 1986 உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் திலகமும் தோல்விகளைச் சந்தித்திருக்கிறார்.
எனவே. ரஜினி, சிவாஜியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் பாடம் என்பது களப் பணி, மக்கள் தொடர்பு மற்றும் தொடர் உரையாடல்.
அரசியலில் தனக்குத் தெரியாதது இருக்கிறது என்கிறார் ரஜினி. சிவாஜியிடமிருந்தே அவர் அதைப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு தலைவனை மக்கள் நம்ப வேண்டும். அரசியல் காலச் சூழல் ஒத்துழைக்க வேண்டும்.
மற்றபடி (கமல்) சொல்லித் தெரிய வேண்டியதில்லை அரசியல் கலை!
ஷியாம் சண்முகம்
ஊடகவியலாளர்