களவு தொழிற்சாலை – விமர்சனம்

நாயகன் கதிர் கோயில்களில் உள்ள சிறுசிறு சிலைகளை திருடுவது, அதனை விற்பது என சிறிய அளவில் சிலை கடத்தல் தொழிலை செய்து வருகிறார். சிலை கடத்தல் என்றாலே அந்த பகுதி போலீசால் கைது செய்யப்படும் முதல் ஆள் கதிர் என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவனாக வருகிறார். இதுஒருபுறம் இருக்க கதிரும், நாயகி குஷியும் காதலித்து வருகின்றனர்.

மறுபுறத்தில் அதிக மதிப்புள்ள சிலைகளை திட்டம் போட்டு திருடி, அதனை வெளிநாட்டில் விற்று பணம் சம்பாதித்து வருகிறார் வம்சி கிருஷ்ணா. இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள சோழர் காலத்து புராதன கோயில் ஒன்றில் மரகத லிங்கம் ஒன்று இருப்பதும், அது பலநூறு கோடிக்கு விலைபோகும் என்றும் தெரிந்து கொண்டு வம்சி கும்பகோணத்துக்கு வருகிறார்.

அங்கு சிலை கடத்தலில் பிரபலமான கதிரை சந்தித்து, அவன் மூலமாகவே அந்த மரகத லிங்கத்தை கடத்த திட்டமிடுகிறார். இதையடுத்து கதிரிடம் நட்பாக பழகும் வம்சி கிருஷ்ணா, மரகத லிங்கத்தை தனக்கு திருடித் தந்தால் அவன் திருமணம் செய்வதற்கு தேவையான பணத்தை தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி கதிரை சம்மதிக்க வைக்கிறார்.

வம்சியின் பேச்சை கேட்டு கதிரும் அந்த சிலையை கடத்தி வம்சியிடம் கொடுத்துவிட்டு, தனது திருமணத்திற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சிலை கடத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரியான ஜெய் ருத்ரா கதிரை கைது செய்கிறார்.

விசாரணையின் போது பல உண்மைகள் வெளிவர, கடைசியில் போலீசில் சிக்கிய கதிர் இந்த சிலை கடத்தில் வழக்கில் இருந்து தப்பினாரா? தனது காதலியை மணந்தாரா? பிரபல கடத்தல் மன்னன் வம்சி கிருஷ்ணா போலீசில் சிக்கினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கோயிலுக்குள் சென்று சிலைகளை கடத்தி வெளிவரும் காட்சிகளிலும், நாயகி உடனான காதல் காட்சிகளிலும் கதிர் சிறப்பாக நடித்திருக்கிறார். சிலைகளை உலகளவில் விற்கும் ஸ்டைலிஷ் கடத்தல் மன்னனாக வம்சி கிருஷ்ணாவின் நடிப்பு சிறப்பாகவே இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தை அவரே முன்னெடுத்து செல்கிறார். சிலையை கடத்த அவர் போடும் திட்டங்களும், அதனை செயல்படுத்துவதிலும் அவரது நடிப்பு ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

நாயகி குஷி கதாபாத்திரத்திற்கு தேவயான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெய் ருத்ரா போலீஸ் அதிகாரியாக வந்து மிரட்டுகிறார். களஞ்சியம், நட்ராஜ் பாண்டியன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

புராதான சிலைகளை கடத்துவது கலாசாரத்தையே அழிப்பதற்கான ஆரம்பம் என்று சிலை கடத்தல் மற்றும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து படத்தின் மூலம் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் டி.கிருஷ்ணசாமி. படத்திற்கு கதை நல்லபடியாக அமைந்திருந்தாலும், திரைக்கதையை செதுக்குவதில் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார். திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாததால் காட்சிகள் மெதுவாக ஊர்ந்து செல்கிறது.

ஷியாம் பெஞ்சமின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை ரசிக்கும்படியாக இருக்கிறது. வி.தியாகராஜனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

மொத்தத்தில் `களவு தொழிற்சாலை’ வேகமில்லை.