காஜல் அகர்வாலை ஆதரித்து நயன்தாரா, ஓவியாவை புறக்கணிக்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டுகள்) இருந்தன. இவை கடந்த 2005ஆம் ஆண்டு வழங்கப்பட்டவை. தொடர்ந்து பல ஆண்டுகளாக அட்டை புதுப்பிக்கப்படாமல், இணைப்புத் தாள்கள் ஒட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், பழைய அட்டைக்கு பதிலாக தற்போது மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த மின்னணு குடும்ப அட்டைகளில் நிறைய தவறான தகவல்கள்; ஏகப்பட்ட குளறுபடிகள்…

உதாரணமாக, எனது மின்னணு குடும்ப அட்டையையே எடுத்துக்கொள்ளுங்கள். குடும்பத் தலைவர் நான் இருக்க, தமிழக அரசு எனனை அப்பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, என் மகனை குடும்பத் தலைவராக நியமித்து, அவனது படத்தை அதில் அச்சிட்டுள்ளது. (இவ்விதம் என்னை நீக்குவதற்கு பழனிசாமி அரசு பொதுக்குழு – செயற்குழு எதையாவது கூட்டி தீர்மானம் நிறைவேற்றியதா என தெரியவில்லை!) மேலும், எனது ஊர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் என அனைத்திலும் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். இவற்றையெல்லாம் விட மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால், எங்களது அட்டையில் எங்கள் வீட்டு முகவரிக்கு பதிலாக, காலியாக இருக்கும் பக்கத்து பிளாட் முகவரியை அச்சிட்டு எங்களிடம் கொடுத்திருக்கிறார்கள்…! இதனால் எங்களுக்கும், பக்கத்து பிளாட்காரருக்கும் எப்போது சண்டை மூளுமோ தெரியவில்லை.

“திருத்தம் செய்துகொள்ளலாம்” என்று சொல்லி இருக்கிறார்கள் தான். ஆனால் எந்த குற்றவுணர்வும் இல்லாமல் அரசாங்கம் தப்பு பண்ணும்; நாம் தான் முயன்று திருத்திக்கொள்ள வேண்டும் என்றால், அது என்ன நியாயம்? என கோபத்தில் இருக்கும் எனக்கு, இன்று ஒரு மின்னணு குடும்ப அட்டையை பார்த்தவுடன் கோபம் மறைந்து ஆதங்கம் தான் ஏற்பட்டது…

அது சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் செட்டிபட்டியைச் சேர்ந்த சரோஜா பெரியதம்பி என்பவரின் மின்னணு குடும்ப அட்டை. அதில் குடும்பத் தலைவரான சரோஜா பெரியதம்பியின் புகைப்படத்துக்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலில் புகைப்படத்தை அச்சிட்டு கம்பீரமாக வழங்கியிருக்கிறது தமிழக அரசு!

0a1d

எனது ஆதங்கம் என்னவென்றால், என்னுடைய மின்னணு குடும்ப அட்டையில் எனக்கு பதிலாக என் மகனின் புகைப்படத்தை அச்சிட்டிருக்கும் தமிழக அரசு, அவனுடைய புகைப்படத்துக்கு பதிலாக நடிகை நயன்தாரா அல்லது நடிகை ஓவியா படத்தை அச்சிட்டு கொடுத்திருந்தால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்! அதை எல்லோரிடமும் காட்டி, என்னுடைய குடும்ப தலைவர் நயன்தாரா அல்லது ஓவியா என்று பெருமையாக சொல்லித் திரிந்திருப்பேனே…!

மட்டும் அல்ல, மினனணு குடும்ப அட்டையில், சம்பந்தமே இல்லாத காஜல் அகர்வால் படத்தை அச்சிட்டு அவருக்கு முழு ஆதரவு கொடுக்கும் தமிழக அரசு, நயன்தாரா, ஓவியா போன்றோரின் படங்களை ஸ்மார்ட் கார்டுகளில் இடம் பெறச்செய்யாமல் புறக்கணிப்பது ஓர வஞ்சனை அல்லவா? இதற்காகவாவது பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும்…!

அமரகீதன்