சமூக வலைத்தளங்களை உளவு பார்க்க வருகிறது மோடி அரசின் ‘நுண்ணறிவு திட்டம்’!
‘நுண்ணறிவு திட்டம்’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களை உளவு பார்க்கும் திட்டம் ஒன்றை மத்திய மோடி அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் அமலுக்கு வரும் இந்த திட்டத்தின் மூலம் மெய்நிகர் தகவல்களைக் கொண்டு கருப்பு பணத்தை கண்டறிய திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, வருமான வரி செலுத்தும் ஒருவரின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக கணக்குகளில் அவர் அளித்திருக்கும் தகவல்களை கொண்டு அவர் பயன்படுத்தும் பொருட்களையும், வருமான வரி தாக்கலின் போது அவர் அளித்திருக்கும் விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்ய வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
உதாரணமாக, ஒருவர் தனது ஆடம்பர சொகுசு காரையோ, அல்லது உயர் மதிப்புடைய கைக்கடிகாரத்தையோ புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டால், அது குறித்த தகவல்கள் அவர் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்கில் இல்லாதபட்சத்தில் அடுத்த கணமே அவர் வீட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட வாய்ப்பு ஏற்படும்.
இந்த நுண்ணறிவு திட்டம் தொடர்பாக இன்போடெக் நிறுவனத்துடன் கடந்த ஆண்டிலேயே வருமான வரித்துறை ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.