நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் 9ஆம் தேதி போராட்டம்: தினகரன் அறிவிப்பு!
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னையில் வரும் 9ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இந்த போராட்டம் 9ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக அம்மா அணியின் மாணவர் அணி சார்பில் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பை இழந்து தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் தற்கொலை குறித்து அன்றே வருத்தம் தெரிவித்த தினகரன், ”நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அளித்த வாக்குறுதிகளை நம்பிய மாணவி அனிதா, இந்த சமூகம் தனக்கு இழைத்த அநீதியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்தத் துயர மரணத்திற்கு யார் பொறுப்பு? நம்பிக்கை வார்த்தைகளை கடைசி நிமிடம் வரை கூறிக் கொண்டிருந்த பொறுப்பற்ற மத்திய, மாநில அரசுகள்தானே காரணம்! நீட் தேர்வு சமூக நீதிக்கான தமிழ் மண்ணின் போராட்டத்திற்கு போடப்பட்ட ஒரு பெரும் முட்டுக்கட்டை என்பதை மாணவி அனிதாவின் மரணம் உணர்த்துவதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர்வார்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், தற்போது போராட்டமும் அறிவித்துள்ளார்.