முதலிரவு பாடலை கண்ணியமாக படமாக்கிய ‘கருப்பன்’ இயக்குனர்: விஜய் சேதுபதி பாராட்டு!
ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், விஜய் சேதுபதி, தன்யா, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிப்பில், டி.இமான் இசையமைப்பில், ‘ரேணிகுண்டா’ பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் ‘கருப்பன்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் டி.இமான் பேசுகையில், “இதற்கு முன்பே ஒரு படத்தில் பன்னீர் செல்வமும், நானும் இணைந்து வேலை செய்தோம். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. முதலில் கருப்பன் தான் வெளிவர இருக்கிறது. ‘மக்கள் செல்வன்’ பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர் விஜய் சேதுபதி தான். அவர் மற்றவர்களுடன் பழகும் விதமே வியக்க வைக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி என்னை மிகவும் கவர்ந்து விட்டார். ஒன் மேன் ஷோவாக இந்த படம் இருக்கும். ஒரு சில ஹீரோக்களின் படம் வெற்றி தோல்வி தாண்டி நமக்கு பிடிக்கும் படமாக இருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதியின் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம்” என்றார்.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசுகையில், “இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்பே விஜய் சேதுபதியை சந்தித்து, நீங்கள் இன்னும் பெரிய இடத்துக்குப் போவீர்கள் என்று சொன்னேன். அதன்பிறகு இந்த வருடம் வெளியான விஜய் சேதுபதியின் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட். சஸ்பென்ஸ், திரில்லர் மாதிரி இல்லாமல் ஒரு லைவான படம் கருப்பன். விஜய் சேதுபதி உட்பட எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்” என்றார்.
இயக்குனர் பன்னீர் செல்வம் பேசுகையில், “நான் பஸ்ஸூக்காக காத்திருந்து, காத்திருந்து, தளர்ந்துபோன நேரத்தில் எனக்கு ஏசி பஸ்ஸே கிடைத்திருக்கிறது. டிரைவராக விஜய் சேதுபதியும், கண்டக்டராக ரத்னம் சாரும் வந்து அமைந்தது என் பாக்கியம்.
சீனு ராமசாமி என்னை அழைத்து விஜய் சேதுபதியை சந்திக்க சொன்னார். விஜய் சேதுபதி இருக்கிற பிஸியில் அவரால் கதை கேட்க முடியவில்லை. பல பேரின் உதவியால் இந்த படம் எனக்கு கிடைத்தது. விஜய் சேதுபதியின் மேனேஜர் ராஜேஷ், இயக்குனர் ரத்தினசிவா, தயாரிப்பாளர் காமன்மேன் கணேஷ், ஸ்ரீதர் என இந்த படம் அமைய காரணமாய் இருந்த அனைவருக்கும் நன்றி.
இந்த படத்தின்போது விஜய் சேதுபதியிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். தூங்கும்போது கூட படத்தை பற்றிய சிந்தனையில் தான் இருப்பார். ஜல்லிக்கட்டுக்கு முன்பே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை பற்றி எதையும் படத்தில் பேசவில்லை” என்றார்.
நாயகன் விஜய் சேதுபதி பேசுகையில், “ரேணிகுண்டா’ படத்தில் ஒரு விலைமாது கதாபாத்திரத்தைக் கூட மிகவும் கண்ணியமாக காட்டியிருப்பார் இயக்குனர் பன்னீர் செல்வம். துளி கூட கவர்ச்சி இருக்காது. இந்த படத்தில் கூட ஒரு முதலிரவு பாடலை மிகவும் கண்ணியமாக படம் பிடித்துள்ளார். நான் பழகியதில் இதுநாள் வரை ஒருவரை பற்றி கூட பன்னீர் செல்வம் குறை சொன்னதில்லை. அவ்வளவு நல்ல மனிதர். ஒரு கமெர்சியல் படத்தை எப்படி எடுத்து செல்வது என்ற வித்தையை அறிந்தவர் ஏ.எம்.ரத்னம். இந்த படத்துக்கு ரெகுலர் வில்லன் தேவையில்லை, ஒரு ஹீரோ வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தபோது, பாபி சிம்ஹாவிடம் சொன்னேன். அவரும் என் நண்பர் என்பதால் எதுவும் கேட்காமல் நடித்தார்.
‘சங்குத்தேவன்’ படம் டிராப் ஆனது எனக்கு பெரிய வருத்தம். அந்த மாதிரி மீசை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசை கருப்பன் படத்தில் நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் நான் நிஜமாகவே மாடு பிடிக்கவில்லை. நிஜமான மாடுபிடி வீரர்களின் காட்சிகளோடு அழகாக மேட்ச் செய்து சிறப்பாக எடுத்துள்ளார் ராஜசேகர் மாஸ்டர். என் கருத்தை எந்த இயக்குனரிடம் நான் திணிப்பதில்லை. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சூழல் இருக்கும். அதனால் அவர்கள் இயக்குனரிடம் கதை கேட்காமல் போயிருக்கலாம். அதை நாம் குறையாக சொல்ல முடியாது” என்றார்.
நாயகி தன்யா, ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள்.