இலங்கை தமிழர்களுக்காக வாழ்ந்த ஒரு போராளியின் கதை – ‘நான் திரும்ப வருவேன்!’

பத்மஜா பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு நாயகனாக நடித்துள்ள தெலுங்கு படம் ‘ஒக்கடு மிகிலாடு’. இதில் நாயகியாக அனிஷா அம்புரோஸூம், மிக முக்கிய கதாபாத்திரத்தில் சுஹாசினியும் நடித்திருக்கிறார்கள்.

ஜி.கே.ராமராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவா நந்திகம் இசை அமைத்துள்ளார். அஜய் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழில் ‘நான் திரும்ப வருவேன்’ என்ற பெயரில் வெளிவருகிறது.

இப்படம் குறித்து இதன் நாயகன் மனோஜ் மஞ்சு கூறியதாவது:

0a1e

நான் சென்னையில் வளர்ந்தவன் இப்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறேன். இலங்கையில் நடந்த படுகொலைகளையும், தமிழ் மக்களின் உணர்வையும் நான் நன்கு அறிவேன். கண்முன்னே தொப்புள் கொடி உறவுகள் கொல்லப்படுவதைப் பார்த்து நான் தவித்து போனேன்.

அந்த வலிகளைச் சொல்லும் வகையில் இந்த கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் அஜய். இதற்காக நிறைய ஆராய்ச்சி செய்து, பல விஷயங்களை கேட்டு, காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்

இது இலங்கை தமிழர்களுக்காக வாழ்ந்த ஒரு போராளியின் கதை. 1990 மற்றும் 2017 கால கட்டங்களில் நடக்கும் கதையாக இது உருவாகி இருக்கிறது. இதில் நான் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இந்த படத்துக்காக அடர்ந்த காடுகள், மலை, ஆழ்கடல் என ஆபத்தான இடங்களில் சில காட்சிகளை படமாக்கினோம். இவ்வளவு சிரமப்பட்டு நடிக்க வேண்டுமா என்று என்னை கேட்டார்கள். அதற்கு நான், ‘ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாவீரன் கதையில் நடிக்க எந்த ஆபத்தையும் சந்திக்க தயார்’ என்று சொன்னேன்.

தமிழ் மொழி, தமிழ் மக்கள் எங்கள் உணர்வோடு கலந்தவர்கள். எனவே இந்த படத்தில் விரும்பி நடித்தேன்.

இந்தியாவை இப்படத்தின் எந்த இடத்திலும் தரம் தாழ்த்தி சொல்லவில்லை. இலங்கையில் நடந்த விஷயங்களை சொல்லியிருக்கிறோம் சென்சாரில் எந்த பிரச்சனையும் வராது என நம்புகிறேன்.

‘நான் திரும்ப வருவேன்’ என்ற தலைப்பு, கதைக்கு மிக மிக பொருத்தமான தலைப்பு. இந்த மாதிரி கெத்தாக ஒரு படம் பண்ணிவிட்டு செத்துப்போனாலும் நான் பெருமைப்படுவேன்.

இவ்வாறு மனோஜ் மஞ்சு கூறினார்.

இந்த படத்தின் தமிழ் வசனம் மற்றும் பாடல்களை சுரேஷ் ஜித்தன் எழுதி இருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் ஆந்திராவில் வெளிவருகிறது. அப்போதே தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

0a1d