பிக்பாஸ்: மன்னிப்பு கேட்டார் கமல்ஹாசன்! அவருக்கு நன்றி தெரிவித்தார் டாக்டர் ருத்ரன்!
சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில், காமெடி டாஸ்க் என்ற பெயரில், மன நோயாளிகள் போல் நடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின்போது, பிக்பாஸ் வீட்டில் நடித்தவர்கள், மன நோயாளிகளை மிகவும் இழிவாக சித்தரிக்கும் வகையில் நடந்துகொண்டார்கள்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தார்கள். மனநல மருத்துவர் ருத்ரன் தனது பதிவில், “மனநலம் குன்றியவர் குறித்து பல மூட கருத்துகள் பலர் மத்தியில் இருக்கையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அது குறித்த விகார விமர்சனமும், வேடிக்கை எனும் பெயரால் காலங்காலமாய் இந்நோய் பற்றிய மட்டமான மடத்தனமான சித்தரிப்பும் ஒளிபரப்பப்பட்டது.
“எது குறித்தும் ஆழமான புரிதல் இல்லாத ஊடக ஆவேசத்தின் அவசர ஆட்டமாய் இதை ஒதுக்கிச் செல்ல முடியவில்லை.
“பிற முட்டாள்கள் இன்னமும் ‘நவராத்திரி’ பட மனநோயாளிகளின் அபத்த நகைச்சுவையையே பிரதான சித்தரிப்பாய் நினைத்துக் கொண்டிருந்தாலும், அந்த கூட்ட்த்தில் இருக்கும் ஒரு செவிலியருக்கும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் எப்படி இருப்பார், நடந்து கொள்வார் என்பது தெரியவில்லை என்பது தான் கேவலம். சமூகத்தில் இப்படித் தான் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளவர்களும் இருக்கிறார்கள், இதில் மருத்துவர்களும் அடக்கம்.
“1986 முதல் 2001 வரை என் எல்லா செயல்பாட்டிலும் மனநலம்+மனநோய் விழிப்புணர்வுக்காக உழைத்தவன் என்பதில் எனக்கு ஒரு தற்பெருமை உண்டு. அத்தனையும் போதவில்லை என வருத்தமும் கோபமும் நேற்று என்னுள் பொங்கியது.
“ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் மூடநம்பிக்கைகள் பரவலாக பரவுகின்றன. மனநோய்கள் குறித்து மக்களிடையே மீண்டும் ஒரு தீவிர விழிப்புணர்வு உருவாக்கும் பணி பொறுப்பானவர்களுக்கு அவசியமாகிறது.
“வியாபார நிமித்தம் கமல் இதை விமர்சிக்காமல் விட்டாலும், இது குறித்து வேறேதாவது தளத்திலாவது பேசுவது இந்நிகழ்ச்சியில் சம்பாதிப்பதற்கான பிராயச்சித்தமாகும். இதெல்லாம் அதீத எதிர்பார்ப்பு என்பதும் தெரியும்” என்று கூறியிருந்தார் மனநல மருத்துவர்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே பிக்பாஸ் குழுவை துணிச்சலாக ஒரு பிடி பிடித்தார் கமல்ஹாசன். அவர் கூறியதாவது:
நான் செய்யாத தவறுக்கு ஒரு சிறு மன்னிப்பை கோர கடமைப்பட்டிருக்கிறேன்….
பிக்பாஸ் வீட்டுக்குள் வாரம் முழுக்க நடக்கும் விஷயங்கள், அவர்களுக்கு இங்கிருந்து கொடுக்கப்படும் டாஸ்க்… இதெல்லாம் நான் உட்கார்ந்து ஏற்பாடு பண்ணுவதல்ல. அதனால் நான் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று சொல்லவில்லை. இந்த நிகழ்ச்சி நானும் சம்பந்தப்பட்டது தான்.
மனநலம் சற்றே குன்றியவர்களைப் பற்றி கேலியாக நடித்துக் காட்டப்பட்டது ரசனைக்கு உரியதாக இல்லை. அதில் எனக்கு கோபமே இருக்கிறது. எதனால் எனக்கு இவ்வளவு கோபம் என்றால், சமுதாயக் கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது.
மனக்குவிப்பு இழந்தவர்கள், மனக்குவிப்பு கலைந்தவர்கள் இல்லாத குடும்பமே கிடையாது. மற்ற குடும்பங்களைச் சொல்வது போல் நீங்கள் நினைத்துவிட வேண்டாம். எங்கள் குடும்பத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில், மாடர்ன் 21ஆம் நூற்றாண்டில், அவர்களை எல்லாம் எப்படி ஒரு மன காப்பகத்துக்குள் அடைத்து வைத்துவிட்டு, நாம் நிம்மதியாக வாழ்க்கையை தொடருகிறோமோ, அந்த மாதிரியெல்லாம் முன்பு செய்ய மாட்டார்கள். எனக்கு ஞாபகம் இருக்கிறது. அரவணைத்து, அவர்களுடைய அந்த நிலைமையை புரிந்துகொண்டு, கல்யாணம், காட்சி என எல்லா இடங்களிலும் உலவ விடுவார்கள். அங்கே வந்தவர்கள் அதை பெரிய அவமானமாக நினைத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த ஆளால் கல்யாணம் நின்று போகாது… எல்லோருமே ரொம்ப அரவணைத்துப் போவார்கள்…
இந்த நேரத்தில் அப்படிப்பட்டவர்களை கேலிக்குரிய விஷயமாகவோ, காமெடியாகவோ பார்க்கக்கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. “ஏன்… உங்க படத்துல நீங்க நடிக்கலையா?” என கேட்டால், என்னுடைய படத்தில் அப்படி மனம் பாதிக்கப்பட்டவர் காமெடியானாக இருக்க மாட்டார்; கதாநாயகனாக இருப்பார். அவருக்குள் ஏற்படும் பதட்டம், அழுகை, கலக்கம் எனக்குள்ளும் கொஞ்சம் இருக்கிறது. சொசைட்டி மாடர்ன் ஆக ஆக, அதற்கு ஈடுகொடுக்க முடியாமல், மனம் பேதலித்துப் போவது என்பது காலகாலமாக நடந்து வருகிறது…
நம்மை நாலு பேர் சேர்ந்து பிரஷர் கொடுத்துக்கொண்டிருந்தால் நமக்கும்கூட அது ஆகலாம்… எனவே, நடந்த அந்த நிகழ்வு இனியும் நடக்காமல் இருக்க, வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இனி ஒருமுறை அதுபோல் நடக்குமாயின், இந்த நிகழ்ச்சி எனக்கு முக்கியம் இல்லை. அது அவர்களுக்கும் (பிக்பாஸ் குழுவினருக்கும்) தெரியும். எனக்கும் தெரியும். சமுதாயக் கடமை நமக்கு இருக்கிறது.
இவ்வாறு கமல் கூறினார்.
பிக்பாஸ் குழுவை இவ்விதம் கண்டித்தும், மனநலம் குன்றியோர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கமல் பேசியதற்கு மருத்துவர் ருத்ரன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், “வருந்திய கமலுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.