ஓவியா – காயத்ரி சமரசம்: தெளியத் தெளிய வெச்சு அடிக்கும் பிக்பாஸ் உத்தி!
கண்ணீர் மல்க காயத்ரியும் ஓவியாவும் கட்டியணைத்துக் கொள்ளும் காட்சியைப் பார்த்து பல பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிகிறது. பொதுவாக, வில்லன் திருந்தி கண்ணீர்விட்டு நாயகனை கட்டியணைத்துக் கொள்வதோடு தமிழ் சினிமாக்களில் ‘வணக்கம்’, ‘சுபம்’ போட்டு முடித்து விடுவார்கள். அது சார்ந்த பயம்தான் ரசிகர்களை இயக்கியிருக்கும் என நினைக்கிறேன்.
அப்படி அஞ்சத் தேவையில்லை. இனிதான் ஆட்டம் சூடு பிடிக்கும். நூறு நாட்கள் இதை ஓட்டுவதற்கான கட்டாயத்தில் இருக்கும் நிகழ்ச்சி வடிமைப்பாளர்களுக்கு இது தெரியாதா?
ஏதோ அவர்களை ‘முஸ்தபா.. முஸ்தபா’ பாட வைத்து இணைப்பதுதான் நிகழ்ச்சியின் நோக்கம் என நினைத்து விடாதீர்கள். நட்பு என்கிற உணர்வு இந்த நிகழ்ச்சியின் மிகப் பெரிய எதிரி.
இப்போது என்ன நிகழ்கிறது?
சிபிஐ விசாரணைக்கு நிகராக அந்த ஐந்து விநாடி வீடியோவை எல்லோரும் பேசி சலித்து விட்டார்கள். நமக்கே கூட ‘என்னடாங்கடா டேய்’ என்று எரிச்சலாகி விட்டது.
எதற்கு வம்பு என்று போட்டியாளர்களும் ஒரு மாதிரியாக சுணங்கி விட்டார்கள். ‘நீ வேறு நான் வேறு’ என்று காயத்ரியும் ஒதுங்கி விட்டார்.
இதே மாதிரி போய்க் கொண்டிருந்தால் எந்த ‘கசமுசா’வும் ஏற்படாது. இதற்கு ஒரே வழி நாயகனுக்கும் வில்லனுக்குமான முரணியக்கத்தை வேறு வழிகளில் நிகழ்த்துவது.
அதற்கே இந்த சமாதான உடன்படிக்கை. இப்போது வேறு சில புது பிரச்சனைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
காயத்ரியின் பாதுகாப்பில் குளிர் காய்ந்துகொண்டிருந்த ஜூலிக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கும். விசுவாசமான ஓர் அடியாளுக்கு எதிர்தரப்பிலிருந்த அடியாள் வந்து சேர்ந்தால் கோபம் வருமா, இல்லையா?
ஆகவே –
அவ்வை சண்முகி திரைப்படத்தில் டெல்லி கணேஷ் சொல்வார்: “ஏண்டா தெளிய தெளிய வெச்சு அடிக்கறீங்க?”
இதேதான் பிக் பாஸின் உத்தியும்.
எனவே சண்டை நிச்சயம் நடக்கும். காத்திருப்போம். ஆண்டவன் நம்மை அப்படியெல்லாம் கைவிட்டு விட மாட்டான்..!
SURESH KANNAN