மனைவி பெயர் நந்தினி, கள்ளர் சமூகம்; என்ன நடந்தது கதிருக்கு…?

திருப்பஞ்சிலி கிராமத்தின் சேரிக்குள் நுழையும்போதே சாவுவாசனை முகத்தில் அடித்தது. “கதிரேசன் என்கிற கதிர் வீடு எங்கே?” என்று கேட்டேன். ஒரு சிறுவன்தான் அந்த வீட்டினை அடையாளம் காட்டினான். வாழை செடிகள் மலர்ந்து நின்றன. வீட்டுக்குள்ளிருந்து 18 வயது தம்பி ஒருவன் வந்தான். என்னைப் பார்த்ததும், “கதிர் சார்… உங்களை தெரியும். நீங்கள்தானே தீண்டாமைக்கு எதிராக போராடிக்கொண்டு இருப்பவர்” என்று என் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டான். “தம்பி, நீ யாருப்பா?” என்றேன். “சார்… கொலை செய்யப்பட்ட கதிரின் தம்பி சார்” என்று கண் கலங்கினான். கதிரின் மனைவியும், அம்மாவும், அப்பாவும், அண்ணன்களும் வரிசையாக வந்தனர். கதிருக்கு திருமணம் ஆகி 5 மாதம் தான் ஆகிறது. மனைவியின் பெயர் நந்தினி. கள்ளர் சமூகம்.

என்ன நடந்தது கதிருக்கு?

0a

கடந்த 08.07.2017 அன்று காலை சுமார் 6.00 மணியளவில் சாதி இந்துவான தங்கராசு (57) த.பெ.வீரபத்திரபிள்ளை, அவரது மகன்கள் சுரேஷ் (37), பாஸ்கர் (30) ஆகிய 3 பேர் கொண்ட கும்பல் கதிரேசன் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே புகுந்து கதிரேசனை தேடியுள்ளனர். அங்கிருந்த பொருட்களை எல்லாம் காலால் எட்டி உதைத்து விட்டு பீரோவை திறந்தும் பார்த்துள்ளனர். கதிரேசனின் மனைவி நந்தினியும், தாயார் மல்லிகாவும் “எதற்காக கதிரேசனை தேடுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “என் தோட்டத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயினை கதிரேசன் சேதப்படுத்தி விட்டான். அவனை கொல்லாமல் விட மாட்டோம்” என்று கூறிக்கொண்டே அந்த கும்பல் வெளியேறி இருக்கிறது.

மறுபடியும் 30 நிமிடம் கடந்து வீட்டிற்கு வந்த அதே கும்பல் நந்தினியிடம், “உன் புருசன் எங்கு இருக்கிறான்? மரியாதையாகச் சொல்” என்று மிரட்டியுள்ளனர். வீட்டிற்கு அருகாமையில் உள்ள காட்டு பகுதியில் கதிரேசன் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றிருக்கிறார். அதனைத் தெரிந்துகொண்டு, அந்த பகுதிக்குச் சென்ற தங்கராசும், சுரேசும், பாஸ்கரும் கதிரேசனைப் பிடித்து, சாதி ரீதியாக இழிவாகப் பேசி, செருப்புக் காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளனர். இரும்புக் கம்பியால் அவரது முகத்தில் அடிக்க, பற்கள் உடைந்தது. அந்த பகுதிக்கு நந்தினியும், மல்லிகாவும் விரைந்துள்ளனர். நந்தினி அழுதுகொண்டே, “என் புருசனை அடிக்காதீர்கள்” என்று காலில் விழுந்து கதறி அழுதிருக்கிறார். அந்த கும்பல் நந்தினியின் முடியைப் பிடித்து இழுத்து, வயிற்றில் எட்டி உதைத்துள்ளனர். மல்லிகாவையும் கன்னத்தில் அறைந்துள்ளனர். பலத்த காயமடைந்த கதிரேசன் அழுதுகொண்டே, “நான் எந்த குழாயையும் உடைக்கவில்லை” என்று பரிதாபமாக கெஞ்சி அழுதிருக்கிறார். அந்த 3 பேரும் கதிரேசனை இரண்டு கைகளையும் முதுகுக்கு பின்னால் இழுத்து வைத்து கயிற்றால் கட்டி, அடித்துக்கொண்டே இழுத்துச் சென்றுள்ளனர்.

திருப்பஞ்சிலி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள அரசமரத்தின் அடியில் கதிரேசனை அடித்து நிர்வாணமாக்கியுள்ளனர். அங்கு 15 பேர் கொண்ட கும்பல் கதிரேசனை சாதி சொல்லி இழிவாக திட்டிக்கொண்டே தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் “கீழ்சாதி நாயிக்கு கட்சி கேக்குதா?” என்று கூறி தாக்க, மற்றொருவர், “எங்க பொண்ணுங்கள திருமணம் செய்து கொண்டால் எங்களுக்கு சரிக்கு சமமாக வந்துவிடுவாயா?” என்று கூறி தாக்கியிருக்கின்றனர்.

இந்த தாக்குதல் பொது மக்கள் முன்னிலையில் நடந்திருக்கிறது. அந்த இடத்திற்கு நந்தினியும், மல்லிகாவும் சென்று, அடித்தவர்கள் காலில் விழுந்து கெஞ்சி, “கதிரேசனை விட்டுவிடுங்கள்” என்று கதறியிருக்கின்றனர். அந்த 3 பேரும் கட்டப்பட்டிருந்த கதிரேசனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அடித்தே கொன்று உள்ளனர்.

முதுகுக்கு பின்னால் கைகள் கட்டப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் கதிரேசன்.

இந்த சமூகம் எனக்கு தொடர்ந்து பிணங்களை கணக்கு எடுக்கவும், அவற்றை அடுக்கவும் உத்தரவு இட்டு இருக்கிறது. போராளி என்கிற அடையாளத்தோடு வெட்டியான் வேலையை செய்து வருகிறேனோ என்கிற அச்சமும் என்னை வாட்டுகிறது. இந்த மனித உரிமை மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை இழக்கத் தொடங்கினாலும், சேரி மட்டும் என்னை தேற்றிக்கொண்டே இருக்கிறது. என்ன செய்ய..?

EVIDENCE KATHIR