தேவேந்திர குல வேளாளர் களுக்கு…
இது என் தனிப்பட்ட பதிவு. என் கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். யாருடைய தூண்டுதலோ, யாரோ சிலரின் நலனுக்காகவோ, யார் மனதையும் புண்படுத்தவோ இல்லை.
என் சமூகம் #பள்ளர் சமூகம். திடீர்னு தேவேந்திர குல வேளாளர்கள் எங்க இருந்து முளைச்சாங்கனு எனக்கு தெரியல. அதுக்கு அவங்க என்ன ஆராய்ச்சிய வேணா ஆதாரமா காட்டட்டும்.. ஆனா, அதுக்கு முன்னாடி என் கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு காட்டவும்..
1. நா என்னதான் “SC இல்ல BC”ன்னு சொன்னாலும், எங்க ஊர்ல உள்ள செட்டியாரோ, ஆசாரியோ, கள்ளரோ வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வைக்கப் போறதில்ல..!! (மத்த நாளாச்சும் பக்கத்துல நின்னு பேசுவாங்க. ஆனா இந்த புரட்டாசி மாசம் வந்தா ஆச்சிங்க (செட்டியார்) எல்லாம் எங்க காத்து பட்டாலே தீட்டுங்கிற மாதிரி எங்களை பார்த்தாலே உள்ள எந்திரிச்சு போயிடுவாங்க..)
2. “நா SCல இருந்து BC க்கு promote ஆகிட்டேன்”னு சொன்னதும், எந்த ஐயர்வாளும் கூப்பிட்டு, “அம்பாளுக்கு அபிஷேகம் பன்னு ஓய்ய்ய்”னு சொல்லப் போறதில்ல..!!
3. வருஷா வருஷம் பழனியம்மா (என் அம்மா) எங்க அப்பச்சியோட குலதெய்வ கோயிலுக்கு கூட்டி போகும். அங்க உள்ள பூசாரி ஒரு லிமிட் வரை தான் எங்களை அனுமதிப்பாரு. அதுக்கு மேல வேற சாதி ஆளுக தான் போவாக. அந்த பூசாரியும் “நா BC ஆகிட்டேன் சாமி”னு சொன்னா, “வாம்மா தாயி, வந்து கருப்பனுக்கு விபூதி வச்சுவிடு”னு சொல்ல போறதில்ல..!! (ஆனா, படையல் வைக்கக் கொண்டு போற பொருள்களையும், என் அம்மா சுளையா கொடுக்குற 500 ரூபா காசையும் பல்ல இளிச்சுட்டே வாங்கிப்பாரு..) (விராச்சிலை பக்கத்துல கலிங்கு கருப்பர்..)
4. என் உயிர்த் தோழியோட தாத்தா எனக்கு வைத்த “ஈன ஜாதி முண்டை” என்ற பட்டம் “வாம்மா BC ரோசி”னு மாற போறதில்ல..!!
5. எல்லாத்துக்கும் மேல, SCல இருந்து வேணா BC ஆகலாம்.. ஆனா, ஒரு போதும் பள்ளத்தெரு BC தெரு ஆகாது ஓய்ய்..!!
ஏன் இட ஒதுக்கீடுனா.. நானும் பிராமின் பொண்ணான என் தோழியும் படித்த விதத்தில் உள்ள வேறுபாடு தான் காரணம்..
1. ஏழு மணி ஆனா ‘ஆனந்தம்’ சீரியல்ல ஆரம்பிச்சு, ‘மெட்டி ஒலி’ வரைக்கும் பார்க்கிறதுக்காக, என்னை தெருலைட்டுக்கு படிக்க தொரத்தி விட்டதுக்கும், என் தோழி வீட்டுல அவ படிக்கிறதுக்காகவே அவங்க அம்மா கேபிள் கனெக்ஷன் கட் பண்ணதுக்கும் உள்ள வித்தியாசம்..!!
2. ஸ்கூல்ல வாத்தியார் ஒழுங்கா பாடம் நடத்தாததால “டியூஷன் போகணும்”னு சொன்னதுக்கு, “அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல. வீட்ல இருந்து படி”ன்னு சொன்னதுக்கும், ஒவ்வொரு சப்ஜெக்டுக்கும் தனித்தனி டியூஷன் அனுப்புன என் தோழியோட அம்மாவுக்கும் உள்ள வித்தியாசம்..!!
3. என் வீட்டுல பழைய சோத்துக்கு தொட்டுக்க உப்புல போட்ட எலுமிச்சை.. சில நேரம் அதுவும் இருந்ததில்ல. என் தோழியோட சாப்பாடே பாதாமும், மாதுளையும் தான் ..!!
இப்படி வளர்ப்புல உள்ள வித்தியாசம் நாங்க எடுத்த மார்க்குலயும் பிரதிபலிச்சது வாஸ்தவம்தானே..??
மிகப் பெரிய டவுட் என்னனா, ஊர்ல பல பயலுக ஒழுங்கா படிக்காம பத்தாவது பெயிலாகித் தான் சுத்திக்கிட்டு இருக்காய்ங்க. யாருக்கு இட ஒதுக்கீடு கேட்குறீங்க..?? படிச்சுட்டு எத்தனை பேரு வேலை இல்லாம இருக்காங்கனு லிஸ்ட் இருக்கா..??
Scholarship வாங்கி படிச்சவங்களுக்கும், SC ஹாஸ்டல்ல ஃப்ரீயா stay பண்ணவங்களுக்கும் தான் தெரியும் அதோட அருமை..!! Scholarshipஉம், free uniformஉம் இல்லனா என் அம்மா அஞ்சாவதுக்கும் மேல என்னை ஸ்கூல்லயே சேர்த்து இருக்காது. அஞ்சாவுதுக்கும் மேல அஞ்சு பொட்டை புள்ளைகளை படிக்க வைக்கிறது சாதாரண விஷயமா..??
ஆகபெரும் டவுட் என்னனா, டாக்டர் ஐயா அவர்கள் எந்த கோட்டாவுல டாக்டர் சீட்டு வாங்குனாரு? அவர் மகனும் எவ்வளவு கட் ஆஃப் மார்க்குல படிச்சாரு? இல்ல, தனியார் கல்லூரியில் படிச்சாரானு தெளிவுபடுத்துங்க ..!!
அதே மாதிரி, பட்டியல் இனத்துல இருந்து வெளியேற விரும்புறவங்க எல்லாம், பட்டியல் இனமா இருந்தப்போ வாங்குன பட்டங்களையும், கவர்மெண்ட் வேலைகளையும் தூக்கி எறிஞ்சுட்டு, பட்டியல் இனத்துல இருந்து வெளியேறி, ஆண்ட பரம்பரையாக… சாரி… ஆளப் போகும் பரம்பரையாக வாழ வாழ்த்துக்கள்..!!
கடைசியாக ஒன்று. இத்தனை வருடத்தில் இல்லாத எழுச்சி, அமித்ஷா மாநாடு நடத்தியதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இன்று முற்றிய நிலையில் இருக்கிறது. வெளியேற விரும்பும் நீங்கள் தனித்தனியே மனு கொடுத்து வெளியேறுங்கள்..!! ஒட்டுமொத்த பள்ளர்களையும் நீங்கள் ஒன்றும் குத்தகைக்கு எடுக்கவில்லை..!!
சாதி, மதமற்ற ரோசியாக வாழ விரும்பிய என்னை#பள்ளர்_ரோசியாக பேச வைத்ததற்கு நன்றி..!! எனக்கு கிடைக்கும் #இட_ஒதுக்கீட்டை தடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது..?? இது என் உரிமை..!! அதை தடுக்க நீங்கள் யார்..??
கடைசியாக பெரிய டாட்…!!
ரோசி மது