எமர்ஜென்சி: மோடியின் ‘குரங்கு குளியல்’ பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி!
வானொலியில் ‘குரங்கு குளியல்’ (மங்கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவதை ஆரியத்துவ பிரதமர் நரேந்திர மோடி வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் அவர் இன்று ஆற்றிய உரையில், காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி கொண்டு வந்து அமல்படுத்திய அவசர நிலை பிரகடனம் குறித்து நினைவூட்டி பேசினார். அப்பேச்சு வருமாறு:
கடந்த 1975ஆம் ஆண்டு இதே நாளில் தான் அவசரநிலை (எமர்ஜென்சி) பிரகடனம் செய்யப்பட்டது. மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஜனநாயகத்தை காப்பாற்றினார்கள். 1975 ஜூன் 25 ஜனநாயகத்தின் மிகவும் இருண்ட நாளாகும். ஒட்டுமொத்த தேசமும் சிறையாகியது. நீதித்துறையும் முடக்கப்பட்டது.
ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்களை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது, நேர்மறையான நோக்கத்தை நோக்கி நாம் முன்செல்ல வேண்டும். வாஜ்பாய்ஜி கூட சிறையில் அடைக்கப்பட்டார். ஜனநாயகத்தின் மீதான நம்முடைய அன்பானது ஒரு விலைமதிப்பற்ற பாரம்பரியமாகும்.
இவ்வாறு மோடி பேசினார்.
எமர்ஜென்சி நிலையை நினைவுபடுத்திய மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. “மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு, நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை நிலையை அமல் செய்து வருகிறது” என அது சாடியுள்ளது.
என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராயின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டது, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் மோசமான நிலை ஆகியவற்றை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டாம் வேதக்கான் பேசுகையில், “ஆம், நாம் எமர்ஜென்சியை மறந்து விட்டோம். ஆனால் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையானது நாட்டில் நிலவுகிறது. மீடியாக்கள் இலக்கு ஆக்கப்படுகிறது. மீடியாக்கள் மீது சோதனைகள் நடக்கிறது, இவை எல்லாவற்றையும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில்தான் பட்டியலிட முடியும்” என்றார்.