மோடியின் கைக்கு அடக்கமான ராம்நாத் கோவிந்த் – பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர்!
மேலே உள்ள படத்தில் இருக்கும் இருவரது உடல்மொழியை பாருங்கள். பிரதமர் நரேந்திர மோடி ஓர் எஜமானனுக்கு உரிய அலட்சிய பாவத்துடன் அமர்ந்திருக்கிறார். அவர் அருகே பவ்யமாக, தன் கையோடு கை பிடித்துக்கொண்டு, ‘சொல்லுங்க எஜமான்’ என்கிற ரீதியில் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருக்கிறார் பீகார் மாநில ஆளுனர் ராம்நாத் கோவிந்த்.
மோடியின் கைக்கு அடக்கமான இந்த ராம்நாத் கோவிந்த் தான் பாரதிய ஜனதா கட்சியின் குடியரசு தலைவர் வேட்பாளராக இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராம்நாத் கோவிந்த் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். தீவிரமான ஆர்.எஸ்.எஸ். பற்றாளர். அதாவது, அவர் ஓர் ‘இந்துத்துவ தலித்’!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் 1945ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பிறந்த ராம்நாத் கோவிந்த், டெல்லி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மொத்தம் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர்.
பா.ஜ.க.வின் தலித் பிரிவு தலைவராக இருந்துள்ள அவர், அக்கட்சி சார்பில் 1994ஆம் ஆண்டு முதன்முதலாக உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக இருமுறை, அதாவது 2006ஆம் ஆண்டு வரை அவர் எம்.பி.யாக பணியாற்றினார்.
2015ஆம் ஆண்டு முதல் பீகார் மாநில ஆளுனராக இருந்து வருகிறார். தற்போது பாஜக.வின் குடியரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அவர், வரும் 23-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்யவிருக்கிறார்.