மைய ஆட்சியாளர்கள் அறமற்றவர்கள் மட்டும் அல்ல, வெட்கமும் அற்றவர்கள்!
மைய அரசின் ஆட்சியாளர்கள் அறமற்றவர்கள் மட்டுமில்லை, தங்கள் இழிசெயல்கள் குறித்த குறைந்தபட்ச வெட்கமும் அற்றவர்கள். என்டிடிவி (NDTV) மீது சிபிஐ நடத்தியிருக்கும் அத்துமீறிய சோதனை நடவடிக்கை. ஆங்கில செய்தி ஊடகங்களில் அது மட்டுமே மைய அரசு மீதான விமர்சனங்களை முன்னெடுத்து வந்தது. அதன் குரல்வளையை நசுக்கிவிட முனைந்திருக்கிறது மோடி அரசு.
செலுத்தி முடிக்கப்பட்டுவிட்டதான வங்கிக் கடனை, ஐசிஐசிஐ வங்கிக்குச் செலுத்தவில்லை என்ற வழக்கில் மேற்படி நடவடிக்கை.
செய்தி ஊடகங்களில் சென்ற மாதம் ”இந்தியா டுடே” பணிந்தது. மோடியையும், ஜெ.வையும் பதறி எழுந்து ஓடவிட்ட கரண் தாப்பருக்கு சத்தமில்லாமல் ‘கல்தா’ கொடுத்துவிட்டு தாங்களும் இந்திய ராணுவத் துதி பாடல், காஷ்மீர் எதிர்ப்பு பிரச்சாரம் (ஹுரியத் தலைவர்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக கலவரம் செய்ய பணம் தருவதாக பேரம் பேசி, அதை ‘ ரகசிய’ வீடியோ எடுத்து ‘நல்ல பெயர்’ வாங்கியது), தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் பாக். எதிர்ப்பு எனக் களைகட்டியது. நியுஸ் எக்ஸ் அதற்கு முன்னரே ‘வழிக்கு வந்து விட்டது‘. எஞ்சி இருந்தது என்டிடிவி-யும், சிஎன்என் நியுஸ் 18 மட்டும்தான்.
சிஎன்என் நியுஸ் 18, ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமானது எனத் தகவல். எனவே INDEPENDENT MEDIA (சுயேச்சையான ஊடகம்) என்ற வகையில் செயல்பட்டது என்டிடிவி மட்டுமே. மோடி, ஷா ‘இணையர்களுக்கு” அது உறுத்தியபடி இருந்தது. இதோ தன் ‘அநும சேனை’யான சிபிஐ யை ஏவி விட்டார். அந்தச் செய்தி ஊடகத்தை அதில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர்கள் மிரட்டியபடி தான் இருந்தனர். இன்று எந்தவித கூச்சமுமின்றி ‘ரெய்டு’ மிரட்டலை நிகழ்த்தி இருக்கின்றனர். அந்த செய்தி ஊடகம், “அஞ்சப் போவதில்லை, எங்கள் சுயேச்சை தன்மையைக் காப்போம்” என அறைகூவல் விடுத்திருக்கிறது. அது சாத்தியமாக வேண்டுமென்பதே என் அவா.
”டைம்ஸ் நவ்”, “ரிபப்ளிக்”, “ நியுஸ் எக்ஸ்”, “இந்தியா டுடே” போன்றவைகளின் வரிசையில் இந்தச் செய்தி ஊடகமும் சேர்க்கப்படுமானால், மோடி ‘அவசர நிலை’ பிரகடனம் செய்து இங்கு “பாராளுமன்றத்தையும்” “ஜனநாயகத்தையும்” ஒடுக்க வேண்டியதில்லை. இந்த ஊடகங்கள் ‘தேச விரோதிகளை” அடையாளங் காண்பதிலும், அவர்கள் மீது முத்திரை குத்தி ‘பாகிஸ்தானுக்கு’ போகச் சொல்லிப் போடும் கூச்சல் ‘அனைத்துத் தரப்பையும்” வாய் மூடி மௌனிகளாக்கி விடுவது திண்ணம். இந்த வசைபாடலின் (டைம்ஸ் நவ்) இன்றைய குறி பேரா. பார்த்தா சாட்டர்ஜி. அவர் காஷ்மீர் ராணுவ நடவடிக்கை குறித்து எழுதிய “ஆழமான பார்வை” கொண்ட கட்டுரையின் இயங்கு தளம் குறித்த அடிப்படை அறிவற்ற ‘மூடர்கள்’ அவரை ‘தேசவிரோதி’யாக்கிக் கொந்தளிக்கின்றனர்.
மொழி ஊடகங்கள் (Vernacular / Language media) முதுகெலும்பற்றவை என்பது உலகப் பிரசித்தம். சுண்டுவிரல் அசைந்தாலே சுருண்டுவிடும். பணிபுரியும் .ஊடகவியலாளர்கள் என்ன செய்ய முடியும் முதலாளிகளின் ‘மண்டியிடலுக்கு ‘ முன்.
கட்டற்ற அதிகாரம் பெறும் அறமற்ற, மதவாத அரசு, ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் அற்று இயங்குவது ஜனநாயகத்திற்கு அடிக்கப்படும் சாவுமணி. ஒருவழியாக எதிரிக்கட்சிகளாக மட்டும் இருந்தவர்கள், எதிர்க்கட்சியாக ஆகும் சமிக்கை தெரியும் வேளையில், “தணிக்கை இல்லாமலே தணிந்து” செல்லும் ஊடகங்கள் அவர்களின் குரல்வளையை நசுக்கவே முழுமூச்சுடன் இயங்கும்.
முகப்புத்தகமும், ட்விட்டரும், இதர இணையச் செய்தித்தாள்களும் முடக்கப்பட்டால் அதிர்ச்சியடைய மாட்டோம். அதற்குள் “பழகி” விட்டிருப்போம்.
SUBAGUNA RAJAN