கவிக்கோ அப்துல் ரகுமான் இயற்கை எய்தினார்
கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 80.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. மூச்சுத்திணறல் காரணமாக அவர் காலமானார்.
மதுரையில் 1937-ம் ஆண்டு பிறந்த கவிக்கோ அப்துல் ரகுமான் பள்ளி, கல்லூரி படிப்புகளை மதுரையிலேயே மேற்கொண்டார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் அப்துல் ரகுமான். பின்னர் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி’ 1974ம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதியைப் புகழ்ந்து முத்தமிழின் முகவரி என அவர் பாடிய கவிதைகள் மிகவும் பிரபலமானவை.