தொண்டன் – விமர்சனம்
சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் படம் என்றாலே, அதில் சமூகத்துக்குத் தேவையான கருத்து இருக்கும்; சமூகப் பொறுப்புணர்வுடன் அதை சொல்லியிருப்பார் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அத்தகைய ஒரு முக்கியமான படம் தான் ‘தொண்டன்’.
சமுத்திரக்கனி ஆம்புலன்ஸ் ஓட்டுனர். மிகுந்த இரக்க குணம் கொண்டவர். புத்தனையும், காந்தியையும் மிஞ்சிய அஹிம்சாவாதி. உயிருக்குப் போராடும் நபர் நல்லவரா, கெட்டவரா என்றெல்லாம் பார்க்காமல், அவரது உயிரைக் காப்பாற்ற, அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு, வழியில் எத்தனை இடர்பாடுகள் குறுக்கிட்டாலும் அவற்றையெல்லாம் சாமர்த்தியமாய் கடந்துபோய், மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவிடுவார்.
ஒருநாள். சாலையோரம் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரை, அமைச்சர் ஞானசம்பந்தனின் மகன் நமோ நாராயணின் உத்தரவின்பேரில் கொலை செய்வதற்காக, அவரது அடியாட்கள் வெட்டி, ரத்தவெள்ளத்தில் சாய்த்துவிட்டு தப்பிச்சென்று விடுகிறார்கள். இது பற்றிய தகவல் கிடைத்ததும், சமுத்திரக்கனி ஆம்புலன்ஸில் விரைந்து வந்து, மரணத்தின் விளிம்பில் கிடக்கும் அவரை ஏற்றிக்கொண்டு, மருத்துவமனை நோக்கி விரைகிறார். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நபர் காப்பாற்றப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நமோ நாராயணனின் உத்தரவின் பேரில் அவரது அடியாட்கள் ஆம்புலன்ஸை வழி மறிக்க முயற்சி செய்கிறார்கள். சமுத்திரக்கனி தனது டிரைவிங் சாமர்த்தியத்தால் அந்த முயற்சியை முறியடித்து, மருத்துவமனைக்குப் போய் சேர்ந்து, அந்த நபரை காப்பாற்றிவிடுகிறார்.
இதனால் நமோ நாராயணனின் கோபம் சமுத்திரக்கனி பக்கம் திரும்புகிறது. அவர் சமுத்திரக்கனிக்கு என்னென்ன இடையூறு செய்கிறார்? அவற்றை சமுத்திரக்கனி வன்முறையை கையில் எடுக்காமல் எப்படி தகர்த்தெறிகிறார் என்பது ‘தொண்டன்’ படக்கதை.
பிரேமுக்கு பிரேம் துடிப்புடன் இருக்கும் சமுத்திரக்கனி ஒவ்வொரு மனித உயிரையும் காப்பாற்றுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக, சமூக பொறுப்பாளியாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சமுத்திரக்கனியை காதலித்து கரம் பிடிக்கும் டீச்சராக வரும் சுனைனாவின் கதாபாத்திரம், முந்தைய படங்களைப் போல இல்லாமல், இதில் குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை உணர்ந்து சுனைனாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் கொஞ்சம் பூசினாற்போல் தெரியும் அவரது அழகு நிறையவே மெருகேறி இருக்கிறது.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை, கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ராந்த், இப்படத்தில் ஒரு பொறுப்புள்ள இளைஞராக வலம் வருகிறார். ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய கோபத்தில், காப்பற்றிய மகிழ்ச்சியில் அவரது நடிப்பு கண் கலங்க வைக்கிறது.
சமுத்திரக்கனியின் தங்கையாக வரும் அர்த்தனா, படம் முழுக்க அழகு தேவதையாக உலா வருகிறார். கல்லூரி மாணவியாக உறுதியான கதாபாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார்.
வில்லனாக வரும் நமோ நாராயணனும், கெட்ட சுபாவங்கள் கொண்ட அவரது தம்பியாக வரும் சௌந்தரராஜாவும் கதையை இருவேறு ட்ராக்குகளில் விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.
படம் முழுக்க சமுத்திரக்கனியுடனேயே பயணம் செய்யும் கஞ்சா கருப்பு கதைக்குத் தேவையான காமெடி, செண்டிமென்ட் என சகலத்திலும் கலக்கியிருக்கிறார். சூரி, தம்பி ராமைய்யா, நசாத் ஆகியோர் நகைச்சுவைக்கு அவர்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். ஞானசம்பந்தன், வேல ராமமூர்த்தி, அனில் முரளி, படவா கோபி, திலீபன் ஆகியோரும் தங்களது முதிர்ந்த நடிப்பால் ரசிக்க வைத்திருக்கின்றனர்.
இயக்குநராக சமுத்திரக்கனி தனக்கே உரிய பாணியில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். தற்போதைய முக்கிய பிரச்சனைகளான பெண்களுக்கு எதிரான கொடுமை, விவசாயிகளின் அவலம், பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் கயமை, காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகம், நாட்டு மாட்டினங்களை அழிக்க ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்படும் தடை, சாதிவெறி என தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்.
மருத்துவம் எவ்வுளவு முக்கியமானது, ஒவ்வொரு உயிரும் எத்தனை மதிப்பு மிக்கது என்பதோடு, அநீதிக்கு எதிராககூட வன்முறையை கையிலெடுக்காமல் மாற்றுவழி காண முடியும் என்பதையும் ‘தொண்டன்’ மூலம் உணர்த்தியிருக்கும் சமுத்திரக்கனிக்கு பாராட்டுக்கள். அவர் தீட்டியிருக்கும் வசனங்கள் தீப்பொறி.
ஏகாம்பரம், ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஜஸ்டின் பிரபாகரனின் பாடலிசையும், பின்னணி இசையும் ரசிக்கும்படி இருக்கிறது.
தொண்டன்’ – வரவேற்புக்கு உரியவன்!