“தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து மோடி அரசை எதிர்க்க வேண்டும்!” – பிரகாஷ் அம்பேத்கர்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் உள்ள தலித் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மோடி அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும் என புரட்சியாளர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள பாலபூரி விருந்தினர் மாளிகையில் நாடு முழுவதிலும் உள்ள தலித் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் பேரனும், பரிபா பகுஜன் மகாசங்க கட்சியின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர், இந்திய குடியரசு கட்சி, பகுஜன் சமாஜ், தலித் சங்கர சமிதி உட்பட 50-க்கும் மேற்பட்ட தலித் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பிரகாஷ் அம்பேத்கர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவை மிக மோசமான திசையை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் உணவு, பண்பாட்டு, கலாச்சார உரிமையில் நேரடியாக தலையிடுகிறது. பாஜக அரசுக்கு நாட்டு மக்களின் உயிரை விட மாடுகளின் உயிர் முக்கியமாக இருக்கிறது. நாட்டை காப்பாற்றுவதை விட மாட்டை காப்பாற்றுவதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது. இது, பெரும்பான்மை மக்கள் மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டு தாக்குதல்.
நாட்டில் ஆயிரக்காணக்கான பிரச்சினைகள் இருக்கும்போது, பாஜக அரசு இறைச்சிக்காக மாடு விற்பதை ஒழுங்குப்படுத்த கடுமையான சட்டம் போடுகிறது. அடுத்து எந்த சாதியினர், எந்த மதத்தினர் என மனிதர்கள் உயிர் வாழவும் கடுமையான சட்டம் போடும். மாட்டின் பெயரால் நாட்டில் மிகப் பெரிய கலவரத்தையோ, இனப்படுகொலையோ நிகழ்த்தும்.
மோடி முந்தைய பிரதமர்களைப் போல இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி ஆட்சியை நடத்தவில்லை. மனு தர்மத்தின்படி இந்துத்துவ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இதை தட்டிக்கேட்க இந்த நாட்டில் திராணியுள்ள எதிர்க்கட்சிகள் யாரும் இல்லை. நீதியை நிலைநாட்ட நீதித்துறை தயாராக இல்லை. புரட்சியாளர் அம்பேத்கர் அரும்பாடுப்பட்டு உருவாக்கிய அரசமைப்பு சட்டத்தை முழுமையாக மாற்ற ஆர்எஸ்எஸ் துடித்துக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் மத சார்பின்மையையும், சமூக நீதியையும், சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பாஜக அரசு அழித்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவில் உள்ள அனைத்து தலித் அமைப்புகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது. மொழியை மறந்து, மாநில எல்லைகளை கடந்து, உட்சாதி முரண்களை துறந்து, தலித் மக்கள் தலித் என்கிற ஒற்றை அடையாளத்தில் இணைய வேண்டும். காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளில் இருக்கும் தலித் மக்கள் அக்கட்சியை விட்டு வெளியேற வேண்டும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவது இருக்கும் அனைத்து தலித் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட வேண்டும். 2019-ம் ஆண்டு தேர்தலில் அம்பேத்கர் வலியுறுத்திய அரசியல் அதிகாரத்தை கையிலெடுத்து எம்.பி, எம்எல்ஏ. ஆக வேண்டும். இந்த தேர்தலில் தலித் கட்சியினர் வெற்றி பெற்று பாஜகவின் செயல்பாட்டை நிறுத்தாவிட்டால், இந்துத்துவா கும்பல் இந்தியாவையே அழித்துவிடுவார்கள்”என்றார்.
இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ”மோடி தலைமையிலான மத்திய அரசை பாஜக இயக்கவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு தான் இயக்குகிறது. மோடியின் பெயரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது முதல் மாடு விற்க தடை வரை அனைத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வேலை தான். பிரமாணர்கள் நேரடியாக தலித் மக்களை தாக்காவிட்டாலும், பிராமணர் அல்லாத மோடி கடுமையாக தாக்குகிறார்.
இந்துத்துவ சிந்தனையை தீவிரமாக கடைப்பிடிக்கும் இடைநிலை சாதியினர் தலித் மக்கள் மீது தொடர்ந்து வன்முறையை நடத்தி வருகின்றனர். வீட்டை கொளுத்தி, உடைமைகளை கொள்ளையடித்து, உயிரை பறிக்கின்றனர். பிராமாணர்களை காட்டிலும், இடைநிலை சாதியினர் தலித் மக்களை துன்புறுத்துக்கின்றனர். தங்களின் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு தலித் மக்களை ஒடுக்கும் சட்டத்தை இயற்றுகின்றனர்.
பிராமணர் மற்றும் இடைநிலை சாதிகளின் தாக்குதலை தடுக்க, தலித் அமைப்பினர் அரசியல் அதிகாரத்தை அடைய வேண்டியது முக்கியம் ஆகிறது. நாடு முழுவதும் உள்ள தலித் அமைப்புகள், அரசியல் கட்சிகள் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாக ஆகியுள்ளது. தலித் அமைப்பினரால் மட்டுமே இந்துத்துவ அரசியலை கடுமையாக எதிர்க்க முடியும்.
தேசிய அளவில் தலித் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, தேர்தலில் வென்றால் மட்டுமே புரட்சியாளர் அம்பேத்கரின் அரசமைப்பு சட்டத்தை காப்பாற்ற முடியும். இதை தலித் மக்கள் மட்டுமே தனித்து செய்துவிட முடியாது. சாதி பேதமற்ற ஜனநாயகத்தை விரும்பும் சிறுபான்மையினர், பழங்குடியின அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, தேர்தலில் வெல்ல வேண்டும்”என்றார்.
இதையடுத்து பேசிய கர்நாடக தலித் அமைப்பின் நிர்வாகிகள், பிரகாஷ் அம்பேத்கர், திருமாவளவனின் தலைமையை ஏற்க தயாராக இருக்கிறோம். பிரகாஷ் அம்பேத்கர் அரசியல் பொறுப்பை ஏற்க மறுப்பதால், திருமாவளவனின் தலைமையை ஏற்க தயாராக இருக்கிறோம். தேசிய அளவில் வலுவான தலித் அரசியல் தலைமையை உருவாக்கினால் மட்டுமே, நாட்டை காப்பாற்ற முடியும்.
இன்னும் ஓராண்டில் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற இருப்பதால், தலித் முதல்வரை உருவாக்கும் வேலையில் இறங்க வேண்டும். இதே போல நாடாளுமன்ற தேர்தலும் விரைவில் நடைபெற இருப்பதால் அதற்கான செயல்திட்டத்தை வகுத்து, செயல்பட வேண்டும்”என வலியுறுத்தினர்.