‘மிருதன்’ விமர்சனம்

‘ரோபோ’ என்ற அன்னியச் சொல்லை ‘எந்திரன்’ என மொழிமாற்றம் செய்ததைப் போல, ‘ஸோம்பி’ என்ற அன்னியச் சொல்லை ‘மிருதன்’ என தமிழாக்கம் செய்து, அந்த புதிய தமிழ்ச்சொல்லை புழக்கத்தில் விட்டு பிரபலப்படுத்தியதற்காக ‘மிருதன்’ படக்குழுவுக்கு முதல் பாராட்டு.

‘மிருதன்’ என்றால் ‘மிருகமாய் மாறிய மனிதன்’ என்பது பொருள். மிருக நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சியில் மனிதனாக மாறியவர்கள், அறிவியல் வளர்ச்சியில் விளைந்த அதிபயங்கர வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டு எப்படி ரத்தவெறி பிடித்த கொடூர மிருகமாக மாறுகிறார்கள் என்பதை திகிலூட்டும் வண்ணம் சித்தரிப்பதிலிருந்து படம் ஆரம்பம் ஆகிறது.

ஊட்டி. கொடிய வைரஸ் கிருமிகளுடன்கூடிய ஒரு பயோகெமிக்கல் திரவம் நிரப்பப்பட்ட பீப்பாய்களை, ஆய்வகத்துக்கு கொண்டு செல்வதற்காக பணியாளர்கள் ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு பீப்பாய் தவறி கீழே விழ, மூடி திறந்து, திரவம் சாலையில் கொட்டுகிறது. அதிர்ச்சியடையும் பணியாளர்கள், அவசர அவசரமாக அந்த பீப்பாயை தூக்கி நிறுத்தி, மூடியை எடுத்து சரியாக மூடி, வேனுக்குள் தூக்கிப் போட்டுக்கொண்டு போய்விடுகிறார்கள். சாலையில் கொட்டிக் கிடக்கும் திரவத்தை ஒரு நாய் தற்செயலாக நக்கிக் குடிக்கிறது. அவ்வளவுதான்… திரவத்தில் இருந்த வைரஸ் கிருமிகள் நாயின் உடலுக்குள் புகுந்து, செல்களை உருக்குலைத்து, அச்சமூட்டும் விகார உருவமாய் மாற்றுவதோடு, அதன் மூளையிலுள்ள நியூரான்களையும் சர்வநாசம் செய்து, கண்ணில் படுகிறவர்கள்மேல் அசுர பலத்துடன் பாய்ந்து ரத்தவெறிகொண்டு கடித்துக் குதறி, அவர்களது உடலுக்குள்ளும் வைரஸை பரவச் செய்யும் மிகக் கொடூரமான மிருகமாக மாற்றிவிடுகிறது.

ரத்தவெறி பிடித்த அந்த நாய் ஒரு மனிதனைக் கடிக்க, அவனது உடலுக்குள் வைரஸ் பரவ, அவன் அசுர பலமும் விகாரத் தோற்றமும் ரத்தவெறியும் கொண்ட ‘ஸோம்பி’யாக – மிருதனாக – மாறுகிறான். அவன் தன் தாயைக் கடிக்க, அவள் ஸோம்பியாக மாறி தன் மருமகளைக் கடிக்க, மொத்த குடும்பத்துக்கும் வெறி பிடிக்கிறது. அவர்கள் அனைவரும் வீட்டுக்கு வெளியே பாயந்துவந்து மற்றவர்களைத் துரத்தித் துரத்தி கடிக்க, அந்த மற்றவர்கள் வேறு சிலரை கடிக்க… இப்படியே அந்த பகுதியில் உள்ள மனிதர்கள் படுவேகமாக மிருகவெறி கொண்ட மனிதர்களாக மாறி வருகிறார்கள். இந்த அதிபயங்கர அபாயத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, “யாரும் ஊட்டியைவிட்டு போகக் கூடாது, வெளியார் யாரும் ஊட்டிக்குள் வரவும் கூடாது” என்று அவசரகால தடையுத்தரவு பிறப்பிக்கிறது அரசாங்கம்.

இதற்கிடையில், ஊட்டியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார் நாயகன் ஜெயம் ரவி. அப்பா – அம்மாவை இழந்த அவருக்கு உலகம், உறவு எல்லாமே தங்கை பேபி அனிகா தான். தங்கைக்காக எதையும் செய்யத் தயங்காத அண்ணன், அண்ணனுக்கு அவர் விரும்பும் பெண்ணை மனைவியாக்க வேண்டும் என்று அக்கறை காட்டும் தங்கை என இருவரும் அத்தனை பாசப்பிணைப்புடன் இருக்கிறார்கள். ஆனால், அண்ணன் ஜெயம் ரவி தற்செயலாகப் பார்த்து ஒருதலையாக காதலிக்கும் பெண் டாக்டரும், அரசியல்வாதியின் மகளுமான ல்ட்சுமிமேனனோ, வேறொரு இளம் டாக்டரை காதலித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தங்கை பேபி அனிகா திடீரென காணாமல் போய்விட, அவரை தேடி அலையும் ஜெயம்ரவியை, வெறிகொண்ட விகார ஸோம்பிகள் ஆங்காங்கே துரத்தி வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று குவிக்கிறார் ஜெயம் ரவி. இதை ஆட்சேபிக்கிறார் டாக்டரான லட்சுமிமேனன். “ஸோம்பிகள் நோயாளிகள். கொடிய வைரஸ் கிருமியினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குத் தேவை சிகிச்சைதானே தவிர மரண தண்டனை இல்லை” என்று வாதாடுகிறார்.

தங்கையை கண்டுபிடித்து உடன் அழைத்துக்கொள்ளும் ஜெயம் ரவி, ஸோம்பிகளை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்கவும், ஸோம்பிகளை குணப்படுத்தி மீண்டும் சாதாரணமான மனிதர்கள் ஆக்கவும் தேவையான புதிய மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் லட்சுமிமேனனுக்கும், அவரது மருத்துவக் குழுவுக்கும் உதவ முன்வருகிறார். புதிய மருந்தை கண்டுபிடிக்கும் இவர்களது முயற்சி வெற்றி பெற்றதா? அல்லது நொடிக்கு நொடி எண்ணிக்கையில் பல்கிப் பெருகிக்கொண்டிருக்கும் ஸோம்பிகள் மனிதகுலத்தையே அழித்தொழித்தார்களா? லட்சுமிமேனன் மீது ஜெயம் ரவி கொண்ட ஒருதலைக்காதல் என்ன ஆனது? இவர்களுக்கு ஸோம்பிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கிறது மீதிக்கதை.

‘ரோமியோ ஜூலியட்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’ என ஹாட்ரிக் வெற்றிகளைத் தந்த ஜெயம் ரவி, ‘பேராண்மை’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’ போலவே மிகவும் வித்தியாசமான கதையமைப்பு கொண்ட ‘மிருதன்’ படத்தில் நடிக்க முன்வந்ததற்காகவே அவரை பாராட்டலாம். அவரது கதாபாத்திரத்தில் வேறொரு ஹீரோவை வைத்து இந்த படத்தை யோசித்துப் பார்க்கக்கூட முடியாது. இதில் அத்தனை பாந்தமாய் அவர் பொருந்தியிருக்கிறார். லஞ்சம் வாங்கும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக, தங்கை மீது பாசத்தைப் பொழியும் அண்ணனாக, ஸோம்பிகளை தீரத்துடன் வேட்டையாடும் சூரனாக, ஸோம்பியாக மாறிக்கொண்டிருக்கும்போதும் காதலி மீது கொண்ட காதலை கடுகளவும் இழக்காத உள்ளத்தை உருக்கும் காதலனாக… ஜெயம் ரவி பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி கலக்கியிருக்கிறார்.

லட்சுமிமேனனுக்கு உண்மையிலேயே இது வித்தியாசமான வேடம். ஸோம்பி மீதும் கருணை காட்டும் பெண்ணாக, அவர்களை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கத் துடிக்கும் மருத்துவராக, தன்னை காதலிப்பவருக்கும், கணவராக வரப்போகிறவருக்கும் இடையில் கிடந்து தவிப்பவராக சிறப்பாக நடித்திருக்கிறார். அழகும் கொஞ்சம் கூடியிருக்கிறது..

ஜெயம் ரவியின் தங்கையாக வரும் பேபி அனிகா நம் இதயத்தில் நச்சென இடம் பிடித்துவிடுகிறார். ஆரம்பத்தில் சுட்டிப்பெண்ணாக நம்மை ரசிக்க வைக்கும் இவர், பின்னர் ஸோம்பியாக மாறிக்கொண்டிருக்கும்போது தன் அண்ணனிடம் துப்பாக்கியை கொடுத்து தன்னை கொன்றுவிடுமாறு உருக்கமாக சொல்லும்போது கண்கலங்க வைத்துவிடுகிறார்.

சீரியஸான இந்த படத்தில் காமெடிக்கு தனி இடம் இல்லை என்றபோதிலும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் காளி வெங்கட் நம்மை சிரிக்க வைக்கிறார். அரசியல்வாதியாக வரும் ஆர்என்ஆர்.மனோகர், ஸோம்பிகளை தன் கட்சித் தொண்டர்களாக கருதி வண்டியைவிட்டு இறங்குவதும், பின்னர் அவர்கள் ஸோம்பிகள் என தெரிந்து பதறியடித்து ஓடுவதும் நல்ல காமெடி.

ஸ்ரீமன், ஜீவா ரவி, ராகவன், சுரேந்திரன், கிரேன் மனோகர், அமித் பார்கவ், திலீப்ராயன், நெல்லை சிவா, சூப்பர்குட் கண்ணன், கே.ஆர்.ரஞ்சன் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இமானின் இசையில் “முன்னாள் காதலி…” பாடலும், “மிருதன்…” பாடலும், பின்னணி இசையும் கலக்கல். வெங்கடேஷின் ஒளிப்பதிவு, கணேஷ்குமாரின் சண்டைப் பயிற்சி, மற்றும் கிராபிக்ஸ் பணிகள் படத்துக்கு பலம்.

ஹாலிவுட் படத்துக்கு இணையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன். ஸோம்பி வகை முதல் தமிழ் படத்தை பரிசோதனை முயற்சியாக எடுக்கத் துணிந்ததற்காக  இவருக்கு பாராட்டுக்கள். புதிய கதைக்களம், புதுமையான திரைக்கதை, சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் செல்லும்விதம் ஆகியவற்றுக்காக ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

 ‘மிருதன்’ – வரவேற்புக்கு உரியவன்!