போராட்ட அறிவிப்பு எதிரொலி: ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

தமிழர்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளதை அடுத்து, ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் முதல் நாளில், “ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்” என ரஜினி கூறியிருந்தார். இது பல்வேறு தரப்பிலும் விமர்சிக்கப்பட்டன.

இ ந் நிலையில் கடைசி நாளில் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, “நான் பச்சைத் தமிழன். தமிழகத்தில் அரசியல் நிலவரம் கெட்டுப் போய் இருக்கிறது. ஜனநாயகம் சீர்கெட்டுள்ளது. மாற்றம் தேவை. சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் என்ற பெயரில் சிலர் வேண்டாத கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இந்த அளவுக்கு தமிழர்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது. போர் வரும்போது அதை எதிர்கொள்வோம்” என்றெல்லாம் பேசியிருந்தார்.

தமிழர்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்வதாக ரஜினிகாந்த் பேசியதற்கு தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) அந்த அமைப்பினர் ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இந்தப் போராட்ட அறிவிப்பை முன்னிட்டு ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.