ஸ்டாலின், அன்புமணி, திருமா, சீமான் பற்றி ரஜினிகாந்த் பேச்சு!

ரசிகர்களுடனான 5-வது நாள் சந்திப்பான இன்று (வெள்ளிக்கிழமை), ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது:

என்னை வாழ வைத்த தெய்வங்கள் நீங்கள், நான் நன்றாக இருக்கிறேன். என்னை வாழ வைத்தவர்கள் நன்றாக இருக்கக் கூடாதா?. என்னை மாதிரி அவர்களும் நன்றாக இருக்கக் கூடாதா என்று நினைப்பில் என்ன தவறு இருக்கிறது என தெரியவில்லை.

மற்றவர்கள் இருக்கிறார்கள், நீ என்ன என கேட்கிறார்கள். ஆமாம் இருக்கிறார்கள். தளபதி மு.க.ஸ்டாலின் என்னுடைய நெருங்கிய நண்பர். நல்ல திறமையான நிர்வாகி. சோ சார் அடிக்கடி சொல்வார். அவரை மட்டும் சுதந்திரமாக இருக்கவிட்டால் நல்லா செயல்படுவார். ஆனால் சுதந்திரமாக இருக்கவிட மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்வார்.

அன்புமணி ராமதாஸ் நல்லா படித்தவர். நல்லா விஷயம் தெரிந்தவர். ரொம்ப மார்டனாக சிந்திக்க கூடியவர். உலகம் முழுக்க சுற்றியுள்ளதால், நல்ல திட்டங்களை எல்லாம் வைத்துள்ளார்.

திருமாவளவன், தலித் மக்களுக்கு ஆதரவு கொடுத்து நல்லா உழைத்து வருபவர்.

சீமான், போராளி. அவருடைய கருத்துகளைக் கேட்டு நான் பிரமித்துப் போயிருக்கிறேன்.

இதே மாதிரி தேசிய கட்சிகளில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

அனைவரும் இருந்தாலும் ஜனநாயகம் கெட்டுப் போய் இருக்கிறதே. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மனஒட்டமே மாறி இருக்கிறதே.

முதலில் ஜனநாயகத்தை மாற்ற வேண்டும். மக்கள் மனநிலையை மாற்ற வேண்டும். அப்போது தான் நாடு உருப்படும். அது அனைவருமே சேர்ந்து செய்ய வேண்டியது.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.