தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவராக அபிராமி ராமநாதன் தேர்வு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை ஏற்கெனவே தொடங்கப்பட்டு, இயங்காமல் இருந்து வந்தது. தற்போது அது இயங்கத் தொடங்கியிருக்கிறது. இதன் தற்போதைய தலைவராக அபிராமி ராமநாதன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்ற அமைப்பின் தேவை குறித்து அபிராமி ராமநாதன் கூறுகையில், “ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே திரைப்பட வர்த்தக சபை உள்ளது. தமிழகத்தில் மட்டும் அது இல்லை. இந்த மாதிரி ஒரு அமைப்பு இருந்தால்தான் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆகவே அது கூட்டமைப்பாக மாறிவிடும். இதுவரை கூட்டமைப்பு என்பது தமிழ் திரையுலகில் இல்லாமல் இருந்தது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்பது 4 மாநிலங்களை உள்ளடக்கியது. அதில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருப்பார். அது ஒட்டுமொத்தமாக மத்திய அரசை வலியுறுத்துவதற்காக உள்ளது. அதில் தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. தமிழ் திரையுலகில் வரும் பிரச்சினைகளுக்கு இந்த கூட்டமைப்பு ஒன்றுகூடி தீர்வு காணும். அனைவருமே உறுப்பினர்களாக இருப்பதால், சுலபமாக தீர்வு காண முடியும்” என்று தெரிவித்தார்.