தலைமறைவாக இருக்கும் நீதிபதி கர்ணனின் அடுத்த நடவடிக்கை!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க கொல்கத்தா காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும், நீதிபதி கர்ணனின் உத்தரவு மற்றும் பேட்டியை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீஸார் நேற்று (புதன்கிழமை) சென்னை வந்தனர். ஆனால், அவர் சென்னையில் இல்லை. அவர் காளஹஸ்தி சென்றிருக்கிறார் என்றும், சொந்த ஊர் சென்றிருக்கிறார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக இன்று காலை சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷிடம் கேட்டதற்கு, “நீதிபதி கர்ணன் வெளிநாடு சென்றிருக்கலாம்.. செல்லாமல் இங்கேயும் இருக்கலாம்” என மழுப்பலாகக் கூறி கர்ணன் எங்கிருக்கிறார் என்பதை தெளிவுபடுத்த மறுத்துவிட்டார்.
அவர் மேலும் கூறும்போது, “நீதிபதி கர்ணன் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மனு தயார் செய்ய விரும்புகிறார். இடைக்கால ஜாமீன் பெற விரும்புகிறார். மேலும், ஏற்கெனவே அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனு நாடாளுமன்றத்துக்கு இதுவரை அனுப்பப்படவில்லை. அதை குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
பாகிஸ்தானில் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தன்னை பணி நியமனம் செய்தவர் என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவர் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அதுவரை போலீஸாரிடம் சிக்கிவிடாமல் இருக்கவே அவர் முயற்சிக்கிறார். குறைந்தபட்சம் ஜாமீன் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரையிலாவது போலீஸில் சிக்காமல் இருக்க முயற்சிக்கிறார்” என்றார்.
இதனிடையே, தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு மற்றும் இது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் மே-9ஆம் தேதி தீர்ப்பு ஆகியவற்றை எதிர்த்து வழக்காட விரும்புவதாக நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
‘எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை’ என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து வழக்காட விரும்புவதாக வழக்கறிஞர் மூலம் கர்ணன் மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்ணனின் வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பரா இதனை முத்தலாக் மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹரிடம் தெரிவித்தார்.
இந்த மனுவை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி கேஹர் உறுதியளித்துள்ளார்.