ரசிகர்களை மே 15 முதல் சந்திக்கிறார் ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இது குறித்த ஆலோசனைக் கூட்டமும் அப்போது நடந்தது. இந்த நிலையில், ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திடீரென ரத்தானது.
இது குறித்து ரஜினிகாந்த் கூறியபோது, ‘‘ரசிகர்களை தனித்தனியாக சந்தித்து புகைப்படம் எடுப்பது கடினமாக இருப்பதால், தற்போது நிகழ்வை ரத்து செய்கிறேன். வரும் காலத்தில் ஒவ்வொரு மாவட்டமாக அல்லது 2 மாவட்டமாக திட்டமிட்டு அவர்களை அழைத்து தனித்தனியாக புகைப்படம் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். விரைவில் அந்நிகழ்வு இருக்கும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ரஜினிகாந்த் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளார். 5 நாட்கள் நடக்கும் இந்த முதல்கட்ட சந்திப்பு நிகழ்ச்சி 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை அவர் சந்திக்கிறார். ஒவ்வொருவருடனும் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.