“எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை யின்மை தான் பாஜக.வின் வெற்றிக்கு பின்புலம்!” – கி.வீரமணி
“பாஜகவின் வெற்றிக்குப் பின்புலம் அதன் பலமோ, கொள்கைகளோ அல்ல; மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை, பலவீனம் தான்; மக்களின் அறியாமையும் நம் இளைஞர்கள் ஏமாளித்தனமும் தான்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமான பாஜக தலைமையிலான மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு பல்வேறு தந்திரங்களையும், உத்திகளையும், வியூகங்களையும், வித்தைகளையும், அவ்வப்போது தனது நிறங்களையும், குரல்களையும் மாற்றி மாற்றி, எளிதில் எவரும் ஏமாந்துவிடக் கூடிய பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதையே தனது இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறது. இப்போதே 2019 பொதுத் தேர்தலில் மீண்டும் தங்களது ஆட்சி அமைய திட்டமிட்டு பணியாற்றி வருகின்றது.
பாஜகவின் வெற்றிக்குப் பின்புலம் அதன் பலமோ, கொள்கைகளோ அல்ல; மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை, பலவீனம் தான். மக்களின் அறியாமையும் நம் இளைஞர்கள் ஏமாளித்தனமும் தான்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு என்பது இந்தியாவிலும், மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒன்றாகும்.
அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலையில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், நாட்டில் உண்மைப் பெரும்பான்மை பலம் கொண்ட மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற மதச் சார்பின்மை, மாநில உரிமைகள், சமூக நீதி முதலிய கருத்து சுதந்திரம், உண்ணும் – எண்ணும் சுதந்திரம் உள்பட பலவற்றைக் காப்பாற்றிட அனைத்து எதிர்க்கட்சியினரும் ஓரணியில் திரண்டால் பாஜக அரசின், சமூக நீதிக்கான சதிராட்டம், கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைக்கும் ஒற்றை ஆட்சியை மறைமுகமாகத் திணிப்பது போன்ற சூழ்ச்சிகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிக்க முடியும்.
சோனியா காந்தி அத்தனை அரசியல் எதிர்கட்சிகளை ஒரே அணியில் கொண்டுவர, குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது நம்பிக்கை ஒளியாகும். இது வரவேற்றுப் பாராட்டத்தக்க சிறப்பான முயற்சியாகும்.
வெற்றிக்காக எதையும் இழக்க பாஜகவினர் ஆயத்தமாகி விட்டனர். இந்நிலையில், சோனியா காந்தியின் முயற்சி முழு வெற்றியாக நம் வாழ்த்துகள். இது காலத்தின் கட்டாயம்” என்று வீரமணி தெரிவித்துள்ளார்.