ஆக்கிரமிக்க துடிப்பது அமெரிக்காவா? வடகொரியாவா?
வட கொரிய மக்கள் எப்போதும் போருக்கு எதிராகத் தான் குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களது அரசு போர்வெறி கொண்டு அலையவில்லை. அதைச் செய்வது அமெரிக்க ஏகாதிபத்தியம். அது அந்த மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
நாளைக்கு அமெரிக்க இராணுவம் படையெடுத்தால் அந்த மக்களை கையைக் கட்டி வேடிக்கை பார்க்க சொல்கிறீர்களா? அமெரிக்க குண்டு வீச்சில் அப்பாவி மக்கள் பலியாக மாட்டார்களா? தங்கள் நாட்டை ஆக்கிரமிக்க வரும் அந்நிய இராணுவத்தை எதிர்த்து போரிடுவது தப்பா? உங்கள் வீட்டை கொள்ளையர்கள் தாக்கும் அபாயம் இருந்தால் என்ன செய்வீர்கள்?
இங்கு யார் பக்கம் நியாயம் உள்ளது? மிகப் பெரிய பலசாலியான கோலியத்திற்கு எதிரான நோஞ்சான் டேவிட்டின் போராட்டம் நியாயமானது. அதை ஆதரிப்பது நீதியானவர்களின் கடமை.
அமெரிக்கா தான் வட கொரியாவை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் போர்ப் பிரகடனம் செய்கின்றது. வட கொரியா அல்ல. அது உலகில் எந்த நாட்டின் மீதாவது படையெடுத்துள்ளதா? அது மெக்சிகோ அல்லது கனடாவுக்கு தனது படைகளை அனுப்பியுள்ளதா?
அமெரிக்காவின் இராணுவ பலத்துடன் ஒப்பிடும்பொழுது வட கொரியா ஒருநாள் கூட தாக்குப் பிடிக்க முடியாது. அதற்காகத் தான் அணுவாயுதம் வைத்திருக்கிறது. அந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. தற்காப்பு உரிமை. விரும்பினால் அதை சர்வாதிகாரம் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.
சர்வாதிகாரம் என்பது என்ன? பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு மாறான ஒரு சிறு குழுவின் ஆட்சி. இன்று பல நாடுகளில் ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரமே நிலவுகின்றது. தேர்தலில் வோட்டுப் போட்டவுடன் மக்களின் கடமை முடிந்து விடுகிறது. ஆளுவது எப்போதுமே பணம் படைத்த கிரிமினல் கும்பல் தான்.
அதற்கு மாற்றான நேரடி ஜனநாயகம் பற்றி பலருக்கும் தெரியாது. வட கொரியாவிலும் தேர்தல்கள் நடக்கின்றன. பாராளுமன்ற பிரதிநிதிகளும் இருக்கின்றார்கள். சமூகத்தின் பல மட்டங்களில் ஜனநாயகப் பொறிமுறை உள்ளது. உதாரணத்திற்கு தொழிற்சாலை நிர்வாகத்தில் தொழிலாளர்கள் பங்கெடுக்க முடியும். அமெரிக்காவில் கூட அத்தகைய ஜனநாயகம் கிடையாது.
KALAI MARX