இவர்களை ‘பிடல்’களும், ‘சே குவேரா’க்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!

பாடிஸ்டாவின் ஆட்சி காலத்தில் க்யூப தொழில்கள் அனைத்தும் அமெரிக்காவைத்தான் சார்ந்திருந்தது. தொழில்கள் என்பதைவிட தொழில் என சொல்லலாம். க்யூபாவில் இருந்த ஒரே உள்நாட்டு தொழில் கரும்பு விவசாயம் தான். அதில் கிடைக்கும் சர்க்கரையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அதாவது க்யூபாவின் மொத்த உணவும் அமெரிக்கா, க்யூப சர்க்கரைக்கு கொடுக்கும் பணத்தை நம்பித்தான் இருந்தது.

க்யூப புரட்சிக்கு பிறகு, க்யூப சர்க்கரை ஏற்றுமதி அளவை அமெரிக்கா குறைத்தது. க்யூப பொருளாதாரம் சரிவை சந்தித்தது. பார்த்தார் பிடல். நாட்டில் இருந்த அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்கினார்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் தன்னிறைவு பொருளாதாரமாக இருக்கும் போதுதான் அந்த நாடு வளர்ச்சியுறும். அதாவது, பல உள்நாட்டு தொழில்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். ஒரு தொழில் முடங்கினாலும் மற்றவை கை கொடுக்கும் வகையில்.

க்யூபாவில் ஒரே உள்நாட்டு தொழில் கரும்பு விவசாயம்தான். உள்நாட்டு தொழில்களை பெருக்க வேண்டும் என்றால் அரசுக்கு அதிக வருவாய் இருக்க வேண்டும். அதிக வருவாய் வேண்டுமானால் அதிக கரும்பு விவசாயம் நடக்க வேண்டும். இப்படி புலிவால் பிடித்த கதை ஆக இருந்தது க்யூபா கதை.

அமைச்சராக இருந்த சே களம் இறங்கினார். தன்னார்வ உழைப்பு என பெயர் சூட்டி என்ன வேலை செய்தாலும் ஒவ்வொருவரும் கரும்பு விவசாயமும் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். எல்லாருக்கும் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என எண்ணி தானே கரும்பு தோட்டங்களில் பணி புரிந்தார்.

க்யூபாவின் தொடர் உழைப்பாலும் சந்தை சாராத பொருளாதாரத்தாலும் உள்நாட்டு தொழில்கள் பெருகின. பொருளாதாரம் எந்த நாட்டையும் சாராது தன்னிறைவு கண்டது. மருத்துவம், கல்வி க்யூபாவில் இலவசம். அமெரிக்க புயல்களுக்கும் சரி, உலகின் எந்த மூலையில் உதவி தேவைப்பட்டாலும் சரி, க்யூப அரசின் மருத்துவ உதவி குழு முதலில் வந்து நிற்கும்.

2008 ல் அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார சரிவு உலகெங்கும் சென்றது. ஆனால் லத்தீன் அமெரிக்கவை அடையவில்லை. க்யூபாவை பாதிக்கவே இல்லை.

அது க்யூபா. நாம் இருப்பது இந்தியா!

இங்கு ஏற்கனவே பல உள்நாட்டு தொழில்கள் இருந்தன. அம்பாஸிடர் கார் தொடங்கி, பயோரியா பற்பொடி என வந்து தற்போது முடங்கி கிடக்கும் விவசாயம் வரை பல. அனைத்தையும் மூட்டை கட்டியாகிவிட்டது. காரணம், நம்மை ஆள்வது இந்திய அரசு அல்ல; உலக வங்கி.

உலக வங்கியின் இயக்கத்துக்கு நம் அரசுகள் ஆடிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வேலையே இந்தியா மொத்தத்தையும் அமெரிக்காவிடம் அடகு வைப்பதுதான். இந்திய வளங்கள் அனைத்தையும் உலக நாடுகள் சுரண்ட கொடுப்பதுதான். அதை திறம்பட செய்து கொடுக்கத்தான் அம்பானி தொடங்கி அதானி வரையிலான உள்ளூர் முதலாளிகள்.

உண்மையில் நமக்கு தேவை தன்னிறைவு பொருளாதாரம்; சார்பு பொருளாதாரம் அல்ல. உள்நாட்டு தொழில்களின் பெருக்கம்; அவற்றின் அழிவு அல்ல. ஆனால் அரசுகளுக்கும் முதலாளிகளுக்கும் அமெரிக்கா மட்டும்தான் தேவை.

இத்தனை நாள் சோஷலிசம் என பொய் பேசி ஆண்டவர்கள் இப்போதுதான் அப்பட்டமாக அமெரிக்க சார்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இது பாடிஸ்டாக்களின் ஆட்சி. பிடல்களும் சே குவேராக்களும் இவர்களை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

சகாவு வசனத்துடன் முடிக்க வேண்டுமெனில் நாம் எல்லாம் கம்யூனிஸ்ட்டை பார்த்து சொல்கிறோம்,

“இருட்டுல நிக்காம வெளியே வாடா”

என்று. அவன் சொல்கிறான்.

“இருட்டுல நிக்கறது நான் இல்லடா.. நீ..!”

என்று.

RAJASANGEETHAN JOHN