தொலைந்த செருப்புகளை தேடும் இதயங்கள் இணையும் கதை – ‘என் ஆளோட செருப்பக் காணோம்’!

ஜி.வி.பிரகாஷ் – ஆனந்தி நடிப்பில் வெளியாகி, வணிக ரீதியில் வெற்றி பெற்ற ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் இணை தயாரிப்பாளரும், பல வெற்றிப்படங்களை உலகெங்கும் வினியோகம் செய்தவருமான வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், தனது சகோதரர் விஜயகுமாருடன் இணைந்து, ‘ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரிக்கும் படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.

‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ போன்ற படங்களை இயக்கிய ஜெகன்நாத், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

‘பசங்க’ படத்தில் ‘பக்கோடா பாண்டி’யாக நடித்த பாண்டி, இப்படத்தில் தமிழ் என்ற பெயர் மாற்றத்துடன் நாயகனாக அறிமுகம் ஆகிறார். நாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பாலசரவணன், லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம்புலி  ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படம் குறித்து இதன் இயக்குனர் ஜெகன்நாத் கூறுகையில், “நாயகியையும், அவள் தொலைத்த ஒரு ஜோடி செருப்புகளையும் சுற்றி நடக்கும் கதை தான் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.

ஒரு அடைமழை மாதத்தில் தொலைந்த அந்த செருப்புகளைத் தேடி, தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் நாயகன். 30 நாட்கள் நடக்கும் இந்த தேடல் பயணத்தில் அவன் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் அந்த செருப்புகளால் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் தொகுப்பே இப்படம்.

இறுதியில், செருப்புகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாயகன் வெற்றி பெற்றானா? தொலைந்த செருப்புகள் நாயகியை சென்றடைந்ததா? அந்த செருப்புகள் நாயகனையும் நாயகியையும் ஒன்று சேர்த்ததா? என்பதை நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறோம்.

இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளில் சென்டிமென்ட்டும், சென்டிமென்ட் காட்சிகளில் நகைச்சுவையும் கலந்திருக்கும். பெரும்பாலான காட்சிகளில் மழையும் இருக்கும். மழையும், செருப்பும் தான் இந்தப் படத்தில் முக்கியமான விஷயங்கள்.

கடற்கரை நகரங்களான கடலூர் மற்றும் புதுச்சேரியில் இக்கதை நிகழ்வதாக கதைக்களம் அமைத்திருக்கிறோம். சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு கடலூர் மற்றும் புதுச்சேரியில் 50 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

திரைப்பட ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு நிறைவான படமாக இருக்கும்” என்றார் இயக்குனர் ஜெகன்நாத்.

ஒளிப்பதிவு – சுகசெல்வன்

பாடலிசை – இஷான் தேவ்

பின்னணி இசை – தீபன் சக்ரவர்த்தி

படத்தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார்

கலை – என்.கே.பாலமுருகன்

பாடல்கள் விஜயசாகர்

நடனம் – பாலகுமார் ரேவதி, ‘மெட்டி ஒலி’ சாந்தி – தினா

சண்டை பயிற்சி – ஸ்டண்ட் ஜிஎன்

ஊடகத்தொடர்பு – நிகில்