“தமிழகத்துக்கு தனி ஆளுநரை நியமிக்க மோடி அரசு தயங்குவது ஏன்?”: கி.வீரமணி கேள்வி!

தமிழகத்துக்கு தனியாக ஆளுநரை நியமனம் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் தேவை என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் இப்போது இருக்கும் ஆளுநரே நிரந்தரமானவர் தான் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடந்த 7 மாதங்களாகவே தமிழகத்துக்கென தனியாக ஆளுநர் இல்லை. மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கும் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார். மகாராஷ்டிரமும், தமிழகமும் பெரிய மாநிலங்கள்.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் தனியாக ஆளுநர் இருந்தால் பல குழப்பங்களுக்கு தீர்வு காண முடியும். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக, ஆளுநரை மும்பை சென்று சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வித்யாசாகர் ராவ் முழுநேர ஆளுநராகவே நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய அரசு கூறியுள்ளது. கூடுதல் பொறுப்பு என்பது நிரந்தர ஆளுநர் நியமனமாக கருத முடியாது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த யாரோ ஒருவரைத் தான் ஆளுநராக நியமிக்கப் போகிறார்கள். அதனைச் செய்வதற்குகூட என்ன தயக்கம் என்பது தெரியவில்லை” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.